இனவாதம் பேசினால் உடனடி நடவடிக்கை -ஜனாதிபதி!

Saturday, November 19th, 2016

நாட்டுக்குள் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யமின்றி, இனமத பேதங்கள் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளதாக- அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த நீதி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையில் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்தார். அவ்வாறாயின், புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோல், முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாத கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்தார்.

colmaithree153556214_5023457_18112016_kaa_cmy

Related posts: