இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தெரிவானார்!

Thursday, July 20th, 2017

இந்தியக் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த் நாட்டின் 14 வது குடியரசு தலைவர் ஆகிறார். மொத்தமுள்ள 10 இலட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 இலட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 14வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 17ஆம் திகதி  நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை விட இரு மடங்கு வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே இந்தியாவின் 14ஆவது ஜனாதிபதியாக தெரிவான ராம்நாத் கோவிந்திற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோரால் பாரதிய ஜனதா கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்திற்கு வழங்கப்பட்ட ஆதரவு பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சமூகமான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு உதவிய தேர்தல் திணைக்கள அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.2017ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: