அன்று அரசியலுரிமை வேண்டும் என்ற சுமந்திரன் இன்று இயலாமையால் புலம்புகிறார் – பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, November 9th, 2020

அன்று அபிவிருத்தி வேண்டாம். அரசியல் உரிமையே வேண்டும் என கூச்சலிட்ட கூட்டமைப்பினர் இன்று தமிழ் மக்கள் தம்மை அரசியலிலிருந்து முற்றாக ஓரம் கட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே  சுமந்திரன் உள்ளிட்டவர்களை அபிவிருத்தி அரசியலை நோக்கி நகர வைத்துள்ளது எனவும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான  ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்ராஜபக்ஸ அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டம் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்ட பின் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் கருத்துகு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கடந்த கால அரசாங்கங்கள் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை எனவும்  குறிப்பாக 2010 முதல் 2015 வரையான அரசாங்கம் அழைப்பதில்லை எனவும் தற்போது திரும்பவும் ஆட்சிக்கு வந்திருக்கின்ற போது கொஞ்சம் வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள். எங்களைக் கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள் கலந்துiயாடுவதற்கு அழைக்கிறார்கள் எங்களுடைய கருத்துக்களைக் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாங்களும் கருத்துக்களைக் கூறுகின்றோம் எனவும் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கடந்த 2010 முதல் 2015 வரையான அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜ ஆட்சிக் காலத்தில் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆளுநர் சந்திரசிறீ அவர்களும் இருந்து வந்த நிலையில் 2013ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் பின்னர் வடமாகாண முதலமைச்சராக நீதியரசர் சி.சி விக்னேஸ்வரன் அவர்கள் பொறுப்பேற்ற பின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னரான காலப்பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களாக செயற்பட்டனர். அக்காலப்பகுதியில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கும் சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் அழைப்புக்கள் விடுக்கபட்டிருந்தன. அதனூடாக அபிவிருத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு செயற்படுத்தப்பட்டன.

ஆனால் அன்று அபிவிருத்தி வேண்டாம். அரசியல் உரிமையே வேண்டும் என கூச்சலிட்டனர் கூட்டமைப்பினர். ஆனால் இன்று தம்மை அழைக்கவில்லை என திரு சுமந்திரன் அவர்கள் அப்பட்டமான உண்மைக்கு புறம்பான பொய்யுரைத்துள்ளார். புலிகளின் மறைவுக்குப் பின்னர் 2010ம் ஆண்டில் திரு சம்பந்தனின் பரிந்துரையில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசித்த சுமந்திரன் அன்று கொழும்பிலேயே அதிகமான காலத்தை கழித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய கூட்டங்களுக்கு சமூகமளிப்பதுடன் 2010 – 2015 காலப்பகுதியில் கூட்டங்களுக்கு தமக்கு அழைக்கவில்லை என சொல்வது தமது அரசியல் வீழ்ச்சியை தக்க வைப்பதுடன் வரும் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மென்மேலும் தமிழ் மக்கள் தம்மை ஓரம் கட்டிவிடுவார்களோ என்ற அச்சமே, உரிமை அரசியல் பேசிய சுமந்திரன் அவர்களை அபிவிருத்தி அரசியலை நோக்கி நகர வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

Related posts: