Online மூலம் புகையிரத ஆசன முற்பதிவுக்கு இணையத்தளம், செயலி அறிமுகம்!

Tuesday, March 22nd, 2022

இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்றையதினம் (21) இவை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், எதிர்வரும் காலத்தில் உலகின் எந்தவொரு பகுதியிலிருந்தும் இலங்கையில் புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, புகையிரத நுழைவுச்சீட்டு வழங்கும் செயன்முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இந்த தொகுதியின் மூலம் இலத்திரனியல் நுழைவுச்சீட்டை வழங்கவும், QR குறியீடு மூலம் அதனை உறுதிப்படுத்தவும் முடியும் என்பதால், புகையிரத திணைக்களத்தின் காகித பயன்பாட்டை குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் ஆசனத்தை ஒதுக்கிக் கொள்ளக் கூடிய பயணம் மற்றும் புகையிரத வகுப்பு ஆகியவற்றை தெரிவு செய்து ஒரு சில படிமுறைகள் மூலம் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

அத்துடன், இதற்கான கட்டணங்களை Visa, master மற்றும் Lanka QR  உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவு முறைகளின் மூலம் மேற்கொள்ளலாம் என்பதுடன், m-Ticketing (365) சேவை கொண்ட நிலையங்களுக்கு வந்து பயணச்சீட்டிலுள்ள இலக்கத்துடன் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை சமர்ப்பித்து குறிபத்த முன்பதிவு செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை பெற முடியும்.

இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மொன்டி ரணதுங்க, புகையிரத பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர, SLT மொபிடெல் நிறுவன பிரதான சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷசிக செனரத் உள்ளிட்டோர் உட்பட புகையிரத திணைக்களம் மற்றும் SLT Mobitel நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: