M.P.க்களது ஓய்வூதியம் இரத்துசெய்யப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி!

Saturday, November 12th, 2016

நடைமுறையில் உள்ள ஓய்வூதிய முறைக்குப் பதிலாக பங்களிப்புடனான முறையொன்றை அமுல்படுத்துவதாயின் முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவே வழங்கப்படுகிறது. எனினும், அதனை சம்பளமாக எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் அரசாங்க சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பங்களிப்புடான ஓய்வூதிய முறையொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறான முறையைக் கொண்டுவருவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருடைய ஓய்வூதியமும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வரவு-செலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் முதலாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி. இதனைக் கூறினார்.

சகலருக்கும் நன்மையளிக்கும் துரிதப்பட்ட வளர்ச்சி என்ற பெயரில் வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை சகலரிடமும் வரி அறவிடும் வரவு-செலவுத்திட்டம் எனப் பெயரிடுவதே பொருத்தமாகும். அந்தளவுக்கு மக்கள் மீது வரிகளைச் சுமத்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தினையே வரவு-செலவுத்திட்டம் வெளிக்காட்டியுள்ளது.

2016ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்துக்கு பெயரை மாற்றி, புதிய வாசகங்களைக் கொண்டு 2017ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சகல மக்களின் கருத்துக்களையும் பெற்றே இதனைத் தயாரித்திருப்பதாக நிதி அமைச்சர் கூறினார். அப்படியாயின் சுமத்தப்பட்டிருக்கும் வரிகள் குறைவு. மேலும் வரிகளை அறவிடுங்கள்’ என மக்கள் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்களா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

வற் வரி அதிகரிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேலும் வரிகளை அதிகரிக்கும் வகையில் வரவு-செலவுத்திட்டத்தில் மேலும் பல வரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. வரி அறவீடுகள் இன்றி அரசாங்கத்தை நடத்த முடியாது என ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். இவ்வாறான நிலையில் உற்பத்தி வரி, வற் வரி, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என தற்பொழுது இருக்கும் வரிகளைவிட, சகலரிடமும் வரி அறவிடும் யோசனைகளே முன்மொழியப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதி மீறல்களுக்கான கட்டண அதிகரிப்பு, கார்பன் வரி, நீதிமன்ற வழங்குக்கு வரி, இணையத்தள வரி, ஈசி காஷ் வரி என பல வரிகள் புகுத்தப்பட்டுள்ளன. நாட்டு மக்கள் எவற்றை கூடுதலாகப் பயன்படுத்துகின்றார்களோ அவற்றுக்கான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமது பொருளாதார நெருக்கடிக்கு வரி அதிகரிப்பினூடான தீர்வொன்றைத் தேடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிம் கார்ட்களுக்கும் அரசாங்கம் வரி அறவிடுகிறது.

7200 மில்லியன் ரூபாய்களை தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியிலிருந்து எதிர்பார்ப்பதாகக் கூறி அதனை நியாயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை பலப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் கூறி அவர்கள் மீதான வரி அதிகரிப்பையும் நியாயப்படுத்துகிறது. இவ்வாறு சகல மக்களிடமும் வரி அறவிடும் திட்டத்துக்கு தாம் இணங்கப்போவதில்லையென்றும் கூறினார்.

மோட்டார் சைக்கிள்களுக்கு உற்பத்தி வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களுக்கு அவற்றின் இயந்திர வலுவை அடிப்படையாகக் கொண்டு வரி அறவிடப்படவுள்ளது.

வங்கி மூலம் இடம்பெறும் ஒவ்வொரு 10000 ரூபா கொடுக்கல் வாங்கலுக்கும் 5 ரூபாவை அரசாங்கம் அறவிடவுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தை பயன்படுத்தி வீட்டுக் கடன்களைப் பெறுவதற்கு இருந்த உரிமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு சுமைகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு பங்களிப்புடனான ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

colsunil-handunnetti174904620_4042388_24022016_kaa_cmy

Related posts: