கட்டுப்பாட்டு விலையால் நெல் கொள்வனவில் விலைச்சரிவு – நியாய விலை வேண்டும் என்று கிளிநொச்சி விவசாயிகள் கோரிக்கை!

Thursday, February 9th, 2017

அரசு, அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்ததை அடுத்து தனி நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூடைகளின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகச் செய்கை மேற்கொண்ட விவசாயிகள் அறுவடையை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி, கண்டாவளை, பூநகரி, ஸ்கந்தபுரம், அக்கராயன் போன்ற பகுதிகளில் தற்போது அறுவடை ஆரம்பித்துள்ளது. தனியார் வர்த்தகர்கள் ஒரு கிலோ 41 அல்லது 42ரூபா என்ற அடிப்படையில் ஒரு மூடை நெல்லை 3ஆயிரத்து 500ரூபா முதல், 3ஆயிரத்து 700ரூபா வரை கொள்வனவு செய்தனர். அந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய முடியாது என தெரிவித்த நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபை தனிநபர்களால் தற்போது கொள்வனவு செய்யப்படும் விலையில் இருந்து 200ரூபா குறைந்த விலையிலேயே கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்து நெல் கொள்வனவில் இருந்து ஒதுங்கியது,

விவசாயிகள் தனிநபர்களுக்கு நெல்லைக் கொடுத்தார்கள். தனி நபர்கள் கடந்த 3 நாட்களாக நெல் கொள்வனவு செய்தனர். அரசு  கொண்டு வந்த கட்டுப்பாட்டு விலையால் நெல் கொள்வனவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர்கள் 2ஆயிரத்து 700ரூபாவுக்கே நெல் கொள்வனவு செய்ய முற்படுகின்றனர். கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்ய வேண்டுமானால் அதிக விலையில் நெல் கொள்வனவு செய்ய முடியாது என அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் இடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சில இடங்களில் விவசாயிகள் தனியாருக்கு நெல் விற்பதற்கும் மறுப்புத் தெரிவித்தனர்.

நேற்றைய நிலவரப்படி கிளிநொச்சி மாவட்டத்தின் பல இடங்களில் 75 கிலோ எடை கொண்ட நெல்மூடை ஒன்று 2ஆயிரத்து 700 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டது. ஒரு கிலோ நெல் சுமாராக 36ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. அறுவடை நேரத்தில் அரசு, அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையைக் கொண்டுவந்ததை அடுத்து இந்த விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது, கடன் பட்டு விவசாயத்தை மேற்கொண்ட நாங்கள் வறட்சியால் பெருமளவு நட்டத்தை எதிர்கொண்டோம்; அரசு அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையைக் கொண்டு வந்து விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது. இடைத் தரகர்களின் செயற்பாடுகளாலும் நெல்லுக்கு நியாய விலை கிட்டுவதில்லை. கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட நியாய விலையில் விரைவாக  நெல்லைக் கொள்வனவு செய்வத்கு நெல் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10598262-Yellow-rice-paddy-before-harvesting-Stock-Photo-rice-field-900x450

Related posts: