யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 18th, 2019

யாழ்ப்பாணக் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் தற்போது படையினர் வசமுள்ள 3,918 ஏக்கர் காணியில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகும். எனவே, எமது மக்களது சொந்தக் காணி, நிலங்களையே எமது மக்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத நீங்கள், எண்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்காவை அல்ல எந்தபிரைசஸ் ஸ்ரீ லங்காவைக் கொண்டு வந்தாலும் நடுத்தெருவில் நிற்கின்ற எமது மக்களுக்கு ஏற்படப்போவது ஒன்றுமில்லை என்றே கூற வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;       

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிக அதிகளவில் காணி உரிமங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் நீடிக்கின்றன. திருகோணமலை மாவட்டத்தில் இப்பிரச்சினையானது பல்வேறு பகுதிகளிலும் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. பட்டிணமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவை எடுத்துக் கொண்டாலும், திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவை எடுத்துக் கொண்டாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் காணி உரிமங்கள் தொடர்பில் தொடர்கின்றன.

வவுனியா மாவட்டத்திலே தமிழ்ப் பிரதேச சபையின் கட்டடங்கள் அடங்கலாக விளையாட்டு மைதானம், ஆயுர்வேத வைத்தியசாலை கட்டிடங்கள் போன்றவற்றுக்குக்கூட இதுவரையில் காணி உரிமங்கள் இல்லை என்றே கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காணி உரிமங்கள் தொடர்பில் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம் என்பதை கடந்த காலங்களிலும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேநேரம், வடக்கிலே கோயில் காணிகளில் குடியிருக்கின்ற மக்களின் காணி உரிமங்கள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஓர் ஏற்பாடு மிகவும் அவசியமாகவுள்ளது. இவ்வாறு கோவில் காணிகளில் குடியிருக்கின்ற பெரும்பாலான மக்கள் காணிக்கான உரிமங்கள் இல்லாத நிலையில், எவ்விதமான வீடமைப்புத் திட்டங்களையும் பெற இயலாத நிலை காணப்படுகின்றது.

அந்தவகையில் எமது மக்களின் காணி தொடர்பிலான அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் காணி அமைச்சு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts:

யுத்தத்தால் இறந்த உறவுகளை நினைவுகூர பொது தூபி அமைப்பது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை மக்கள் விடுதலை ...
சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாக்கப்படும் போதுதான் சமூக சீரழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும் - செயலாளர்...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...