பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, January 22nd, 2022

பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை யாரும் தடைசெய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் அமைந்துள்ள கட்டைக்காடு எழுவரைக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பிரதேச மீனவர்களுக்கு உடனடியாக அனுமதியளிக்குமாறு  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதேவேளை வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மக்களின் செயற்பாடுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் – குறிப்பாக விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை போன்ற வாழ்வாதார செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

மருதங்கேணி, வடமாராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முன்பதாக வெற்றிலைக்கேணி பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்று சட்டத்திற்கு முரணான வகையில் தனியார் ஒருவரினால் கையகப்படுத்த முயற்சிக்கப்படுவதாக பிரதேச மக்களினால் முறையிடப்பட்ட நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகள் சகிதம் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்திருந்தார்.

அத்துடன் வடமாராட்சி கிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடுத்துறை பிரதேச கடற்றொழிலாளர்கள் கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதனை நேரடியாகச் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: