தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016

இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிக அதிகமாகவே அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் நமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உணர்வுபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் பல்கலைக்கழகங்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் –

இனங்களுக்கு இடையில் தொடர்புகளுக்கான வாய்ப்புகள் எதுவுமே இல்லாத பகுதிகளிலிருந்து வரும் மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முதற் தடவையாக இந்தப் பல்கலைக் கழகங்களிலேயே பல இனத்தவர்களாக ஒன்று கூடுகின்றனர். விடுதிகளில் தங்கித் தங்களது வாழ்க்கையில் சிறிது காலத்தைக் கழிக்கின்றனர்.

எனவே இந்த மாணவர்களுக்கிடையில் இன ஐக்கியத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் வலுவாகக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலான நிர்வாகம் சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கௌரவ உயர் கல்வி அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்க விரும்புகின்றேன்.

அதே நேரம் வடக்கு மாகாணத்தில் வன்னிப் பகுதியை மையமாகக் கொண்டு மேலுமொரு பல்கலைக்கழகத்தினை நிறுவுவது தொடர்பில் அமைச்சர் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இதற்கான வளங்கள் அங்கு தாராளமாகக் காணப்படும் நிலையில், மாணவர்களை மேலும் அதிகளவில் பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவதற்கு இது வசதியாக அமையக்கூடும் என்பது எனது எண்ணமாகும்.

அதே நேரம் மலையகத்திலும் ஒரு பல்கலைக்கழகத்திற்கான தேவை தொடர்பில் பல வருட காலமாகக் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடத்துக்கு சுமார் 28,900 மாணவர்கள் உள்வாங்கப்படுகின்ற நிலையில்இதில் சுமார் 150 – 200 மலையக மாணவர்களே உள்வாங்கப்படும் நிலை இருப்பதாகக் கூறப்பட்டே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுவதாகத் தெரிய வருகின்றது.எனவே இந்த விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்துவார் என நம்புகின்றேன்.

006

Related posts:

சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் ந...
சுயபொருளாதாரத்திற்கு தடையாக இருப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே - குமுழமுனை மக்கள் ஆதங்கம்!
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...

வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
யாழ் மாநகரசபை சுகாதார சிற்றூழியர் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்தவர் அமரர் ரஞ்சித் டி சொய்சா – அனுதாபப் பிரேரணையில்...