தமிழ் மொழி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில், தமிழ் மொழி மூலமான கற்கைகள் போதிய அளவில் இல்லை என்ற விடயம் குறித்து, நான் ஏற்கனவே இந்தச் சபையில் கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்களிடம் கேள்விகளைக் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளித்திருந்த கௌரவ அமைச்சர் அவர்கள், தமிழ் மொழி மூல பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன எனக் கூறியிருந்தார் –

அதே நேரம் தமிழ் மொழி மூலப் பாடநெறிகளைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்கள் போதியளவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கூற்றினைப் பார்க்கும்போது தமிழ் மொழி மூலப் பாடநெறிகள் ஒழுங்குற இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது என்றே நான் கருத வேண்டியுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் அக்கறையெடுத்து உரிய ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ அவர்கள் மேற்கொள்வார் என நான் எதிர்பார்க்கிறேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்.-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 அரச தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ள போதிலும் அவற்றில் மாணவர்களது வருகை மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில் பார்க்கும்போது உரிய முறையிலான பரவலான பிரச்சாரங்கள் இந்த தொழிற்பயிற்சிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன். எனவே, அங்கு வழங்கப்படுகின்ற தொழிற் பயிற்சிகள் தொடர்பில் உரிய விழிப்புணர்வுகள் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், பாரிய சிலைகளை வடிவமைக்கின்றபோது வெளிநாடுகளிலிருந்து – குறிப்பாக இந்தியாவிலிருந்தே அதற்குரிய சிற்பிகளை நாம் வரவழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். அது பௌத்த தர்மம் சார்ந்த சிலைகளாகட்டும்இந்து மதம் சார்ந்த சிலைகளாகட்டும், அவற்றைச் செதுக்குவதற்கு நாம் பிற நாடுகளையே நாட வேண்டிய நிலையில் இன்னும் இருக்கின்றோம்.

எனினும் எமது நாட்டில் பல திறமைவாய்ந்த சிற்பிகள் இல்லாமலில்லை. அவர்களை ஊக்குவிப்பதற்கு நாம் முன்வரவேண்டும் என்ற கருத்தை இங்கு நான் முன்வைப்பதுடன் எதிர்கால எமது சந்ததியினரும் இந்தக் கலையைப் பயிலக் கூடிய வகையில் எமது தொழிற்பயிற்சி நிலையங்களில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இங்கு முன்வைத்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

001

Related posts: