தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் – டக்ளஸ் எம்.பி!

Sunday, January 21st, 2018

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கூடாகத்தான் எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணமுடியும் என்ற நம்பிக்கையில்தான் இற்றைவரை எமது அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;

வவுனியா தரணிக்குளம் பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஒருகாலகட்டத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேவை இருந்தது என்பது உண்மைதான். இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதனூடாக ஜனநாயக வழிமுறையை நாம் தேர்ந்தெடுத்து அதன் வழியில்; பயணித்தக்கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஆயுத வழிமுறை மூலம்தான் தீர்வுகாணலாம் என்று கூறியவர்களின் நிலை குறித்து மக்கள் நன்கறிவார்கள்.

எனவே இன்று எமது வழிமுறையே சரி என்பதை எமது மக்களும் சக அரசியல் தலைமைகளும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் மட்டுமன்றி சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சக அரசியல் கட்சிகள் எமது வழிமுறைக்கு வந்திருந்தாலும் கூட எமது பொறிமுறைக்கு வராத ஒரு அவலம் இற்றைவரை தொடர்கின்றது. சக தமிழ் கட்சிகளுக்கு குறிப்பாக தமிழ்  தேசியக் கூட்டமைப்புக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அக்கறையோ ஆற்றலோ கிடையாது.

அதுமாத்திரமன்றி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் தமது அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர்கள் கருதுகின்றார்கள்

ஆனால் நாம் அதிலிருந்து மாறுபட்ட்டவர்களாக இருப்பதுடன் எமது மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகவும் உள்ளது.

இந்நிலையிலேயே மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை நாம் மக்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம்

இதற்காக எந்தச் சவால்களையும் நெருக்கடிகளையும் நாம் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related posts: