எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது – அமைச்சர் டக்ளஸின் அறிவுறுத்தலில் கடற்றொழில் திணைக்களம் – கடற்படை கூட்டு நடவடிக்கை!

Tuesday, December 15th, 2020

இலங்கை கடற் பரப்பினுள் நுழைந்து கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்ட விரோத மீன்பிடித் தொழில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்திருந்த நிலையில், கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினருக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று(14.12.2020) இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டதுடன், 3 படகுகள் மற்றும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 படகுகளில் வந்திருந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் கொறோனா அச்சுறுத்தல் காரணமாக கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை கரைநகர் கடற்படை தளத்தில் படகுகளிலேயே தடுத்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், படகுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு எதிராக கடற்றொழில் திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போதே, 27 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுடன் மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்களுடன் சென்றிருந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அச்சநிலையில் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய விசைப் படகுகள் தொடர்ச்சியாக இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களை அழித்து வருகின்றமை தொடர்பாக இலங்கை மீனவர்கள் காணொளி ஆதாரங்களுடன் முறைப்பாடு கொடுத்ததையடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயர் அதிகாரிகளின் உத்தரவிற்கு பின்னர், கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா அல்லது கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது தெரியவரும் என இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள...
இருள் அகன்று நிரந்தர ஒளி பிறக்கட்டும் – தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவின் க...