ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் அரசியல் கொள்கைப் பிரகடனம்!

Sunday, May 8th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் முழுவடிவத்தையும் எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் 

அரசியல் கொள்கைப் பிரகடனம்!

அரசியல் இலக்கு!

 இலங்கைத் தீவானது பல்லின, பல் மத, பல் சமூகங்களை உள்ளடக்கிய மொழி மற்றும் மதச்சார்பற்ற ஓர் பன்மைத்துவ நாடாக இருத்தல் வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

     வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

     ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்கள் சுய நிர்ணய உரிமை கொண்ட ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

 சிறுபான்மை தேசிய இனங்களை மத்திய அரச கட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உப ஜனாதிபதிகள் முறைமை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

  இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் விஷேட அதிகாரங்களுடன் கூடிய தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அரசியல் அலகாக இருப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

   வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கான நிலத்தொடர்பற்ற அகச்சுயாதிக்க அலகு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

 இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மேம்பாட்டு உரிமைகளுக்காகவும், தனித்துவப் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கவும் குரல் கொடுப்போம்.

இலங்கையின் தேசிய மற்றும் நிர்வாக மொழிகளாக தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளும் சமத்துவ அடையாளங்களுடன் பேணப்பட வேண்டும் என்பதோடு இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கவேண்டும் என வலியுறுத்துவோம்.

 இலங்கை அரசினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக அமர்வில் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட, யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெளிப்படைத் தன்மையுடனான பொறுப்புக்கூறலை விரைவாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி நிற்போம்.

  தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ளதாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதோடு அவற்றைத் தமிழ் மக்கள் உணர்வதாகவும், நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வதாகவும் அமைவதை உறுதி செய்வதோடு அதன் மூலம் இலங்கைத் தீவு, ஐக்கிய இலங்கையாகவும், நிரந்தரச் சமாதான தேசமாகவும் மிளிர்வதற்கு நாம் உறுதியுடன் உழைப்போம்.

             இவைகளுக்காக நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கொள்கை வழி நின்று  கிடைக்கின்ற அனைத்து நடைமுறை யதார்த்த வழிமுறைகளையும் எமது மதிநுட்ப சிந்தனையால் பயன்படுத்தி எமது மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுக்க உறுதி கொள்வோம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

பொருளாதார அபிவிருத்தி!

             எமது மக்களின் பாரம்பரிய தொழில்துறைகளான, விவசாயம், மீன்பிடி, பனை தென்னைவளம், மற்றும் கிராமிய சிறு கைத்தொழில்களை. உள்ளுர் மூலவளங்களை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பதோடு,நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக உற்பத்தித் திறனையும், தரத்தையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து தேசிய சர்வதேச சந்தை வாய்ப்புகளை உரவாக்கி அதனூடாக சகல மக்களினதும் சமூக பொருளாதார மற்றும் தேசிய பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்த உழைப்போம்.

             தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் தோறும் தொழில் நிறுவனங்களை உருவாக்கி, அதன்மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்கு எம்மாலான முயற்சிகளை முன்னெடுப்போம்.

             புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் நமது தாயக மண்ணில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதோடு அவர்ளை ஊக்குவித்து அதற்கான வளங்களையும், வசதி, வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.

             சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் போன்ற நவீன சேவைசார் துறைகளையும் மற்றும் மென்பொருள் உருவாக்கத்தையும் எமது பிரதேசங்களில் ஏற்படுத்துவதற்கான முயற்சிளை முன்னெடுப்பதோடு, சர்வதேச தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் சாலைகள் இங்கு அமைவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.

             மேற்கூறிய அனைத்து தொழில் துறைகளையும், நவீன கூட்டுறவு முறை கோட்பாடுகளுக்கு அமைய முன்னெடுத்து அதன் பலாபலன்களை துறைசார் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வதோடு,……

             எமது மக்களுக்காக சமூக மற்றும் தேசிய பொருளாதார அபிவிருத்திக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

மக்களின் காணி நிலங்கள்; மக்களுக்கே சொந்தம்!

             .எமது நீண்டகால கொள்கைகளில் ஒன்றான மக்களின் காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்பதனை தொடர்ந்தும் வலியுறுத்துவதோடு, படைகளின் வசம் இன்னமும் இருக்கும் மக்களின் காணி நிலங்களையும் மற்றும் எமது கடற்பரப்பு கரையோர பிரதேசங்களையும் அவர்கள் மீளப் பெறுவதற்கு  தொடர்ந்தும் உழைப்போம்.

             படைகளின் வசமிருக்கும் விவசாயப் பயன்பாட்டுக்கு உகந்த எமது மண்ணின் அரச காணிகளையும் விடுவித்து அவற்றை மக்கள் பயன்படுத்தி பலன் பெறக்கூடிய நிலைமையை உருவாக்குவதற்கு உழைப்போம்.

             இராணுவக் குடியிருப்பு என்ற போர்வையில் எமது பிரதேச மண் தொடர்ந்தும் அபகரிப்படுவதை எதிர்த்து நிற்போம்.

             முழுமையான அரசியல் தீர்வுடனான அரசியல் யாப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் ஊடாக உரிய முறையில் காணிக் கொள்கை வகுக்கப்படும்வரை, எமது மண்ணில் எமது மக்களின் குடிப்பரம்பலையும், இன விகிதாசாரத்தையும் மாற்றியமைக்கும் விதத்தில் நடைபெறும் திட்டமிட்ட குடியேற்றங்களைத் தடுக்க முன்நின்று உழைப்போம்.

             மாவட்டங்களின் இன விகிதாசார மற்றும் குடிப்பரம்பலின் அடிப்படையிலேயே படையினரும் பொலிசாரும் எமது நிலங்களில் நிலைகொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம்

             அரச காணிகளிலும், பொதுக் காணிகளிலும் நீண்ட காலமாக எமது பிரதேசங்களில்   வாழ்ந்துவரும் மலையக மக்கள் உள்ளடங்களான நிலமற்ற குடியிருப்பாளர்களுக்கு, காணிக் கச்சேரிகள் மூலம் காணி உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை துரிதப்படுத்த நாம் நடவடிக்கை எடுப்பதோடு,….

             எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது கட்சியின் விட்டுக்கொடுக்க முடியாத கொள்கைக்காக மேலும் வீரியமுடன் உழைப்போம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

சிறையில் வாடும் தமிழர்களும், காணாமல் போன உறவுகளும்!

             பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனைகள் இன்றி நிண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், நீதிமன்ற விசாரனைகளை எதிர்நோக்கியுள்ளவர்கள், நீதிமன்றத்தினால் தண்டனைக் குட்படுத்தப்பட்ட தமிழர்கள் அனைவரும், அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நிற்கின்றோம்.

             காணாமல் போனோர் குறித்து எமது மக்கள் பதிவு செய்துள்ள முறைப்பாடுகள் அனைத்தும்  வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரனைகளுக்கு  உட்படுத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதனையும், காணாமல் போதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவதோடு பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கு உரிய நியாயமும், நஷ்ட ஈடும் கிடைப்பதனை உறுதிப்படுத்துவதற்கும் நாம் முன் நின்று உழைப்பதோடு,….

             அனைத்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும், எமது மக்களின் மனித கௌரவத்திற்காகவும் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி தொடர்ந்தும் வீரியமுடன் உழைக்கும் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

 கல்வி வளர்ச்சி!

             வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் செயற்திறனற்ற நடவடிக்கைகளினால் எமது வடக்கு கிழக்கு  மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது. இதன் வெளிப்பாடே அண்மைய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளாகும். இதனைக்  கருத்திற்கொண்டு எமது மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சியை மறுபடியும் உயர்த்திட எம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்.

             இலங்கையின் பாடவிதானங்களுக்கு மேலதிகமாக, மேற்குலக நாடுகளின் கல்வித்திட்டங்களில் உள்ள சிறப்பம்சங்களையும் எமது பூர்வீக வரலாற்றுப் பதிவுகளையும், எமது பிரதேச மாணவ, மாணவிகள் கற்றுக் கொள்வதற்கு வசதி வாய்ப்புக்களை உருவாக்க உழைப்போம்.

             வேலையற்ற பட்டதாரிகள், அரச தொண்டு ஊழியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், தற்காலிக அரச ஊழியர்கள், தொழிற் கல்வி பயிலுனர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனங்கள் பெற்றுக்கொடுக்க எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

             எமது பொருளாதார கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள சேவைசார் துறைகளுக்கான தொழில்சார் கல்வியையும், நவீன தொழில்நுட்ப பாட விதானத்தினையும் எமது மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான சகல நடைவடிக்கைகளையும் எடுப்பதோடு,…

             எமது சமகால, எதிர்கால சந்ததியினர் சிறந்ததொரு கல்விச்சமூகமாக திகழ்வதற்கு

நாம் முன்னரை விடவும் முழுமுயற்சியோடு உழைப்போம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரனடனம் செய்கிறது.

கலை கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள்!

             தமிழ் மக்களின் பாரம்பரிய கலாச்சாரப் பண்பாடுகளிலுள்ள சமூக மேம்பாட்டுக்கான சிறப்பம்சங்களை பாதுகாப்பதன் ஊடாகவும், படிப்படியாக இல்லாதொழிந்து  கொண்டிருக்கும் கலை வடிவங்களின் வெளிப்பாடுகளை பாதுகாப்பதன் ஊடாகவும் எமது இனத்தின் கலை, கலாசார பண்பாட்டு அடையாளங்களை பேணிக்காக்க முன்னின்று உழைப்போம்.

             கிராமங்கள் தோறும் கலை கலாச்சார  மையங்களை உருவாக்கி, அதன் மூலம் கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளை ஈடுபட வைப்பதன் மூலம், போதைவஸ்த்து, மதுபாவனை மற்றும் இளவயதுத் திருமணம் போன்ற சமூக அவலங்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி  நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு,…

             எமது மக்களின் கலை காலாச்சார பண்பாட்டு விழுமியங்களுக்காக முற்போக்கு எண்ணங்களோடு நாம் உழைக்க உறுதி கொள்வோம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

சமூக நீதி!

             சாதிய பாகுபாடுகள் மற்றும் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்தவ சமூகமாகவே எமது மக்கள் கருதப்பட வேண்டும் என்பதோடு பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளையும், மத வேறுபாடுகளையும், பிரதேச வாதங்களையும்;, பெண்களுக்கெதிரான ஆணாதிக்கச் செயற்பாடுகளையும் நிராகரித்து, இவற்றை அடியோடு ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

             சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக அனைத்து தொழிலாளர்களுக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம், தேவையான விடுமுறை, குடியிருப்பு சுகாதார வசதிகள், காப்புறுதித் திட்டம் போன்ற அனைத்து தொழில் உரிமைப் பாதுகாப்பும் கிடைக்க வழி வகை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை செயற்படுத்துவதற்கு எமது முழு சக்தியையும் பயன்படுத்தி உழைப்போம்.

             சமூக, பொருளாதார அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, கல்வி வசதி மற்றும் வாழ்வியல் எழுச்சி என்பன  சகல மக்களுக்கும் பாரபட்சமின்றி பகிரப்பட வேண்டும் என்பதற்காக நாம் உறுதியுடன் உழைப்போம்.

             போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்க்கைத் துணையை இழந்து, குடும்பப் பொறுப்பையும் சுமந்து வாழும், பெண்களுக்கும், பெண்களைத் தலைமைத் துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கும் சமூகத்தில் அவர்களது மறுமணம் உட்பட்ட அனைத்து சமூக அந்தஸ்த்தும் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவர்களுக்கு சகல வாய்ப்புக்களிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதோடு, அதற்கான நெகிழ்வுத் தன்மையை எமது இனம் கடைப்பிடிக்கவும்; வலியுறுத்தி நிற்போம்.

             யுத்த சூழலினாலும் விபத்துக்களினாலும் பிறப்பியல்பாகவும் மாற்றுத் திறனாளிகளாக எமது சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கான விஷேட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுப்போம்.

             தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை அர்ப்பணித்து செயற்பட்ட அனைத்து இயக்கங்களினதும் முன்னாள் போராளிகளுக்கும் அவர்களது வாழ்வியல் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கு உறுதுணைகாக இருப்போம்.

             பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாகவும் எமது கமூகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து எதிர்ப்பு மற்றும் விழிப்புனர்வு போராட்டங்களுக்கும் ஆதரவு வழங்குவதோடு, போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவும் நாம் உறுதி கொள்வோம்.

             அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளான, மனித உரிமைகள், வாழ்வுரிமைகள், சமூக உரிமைகள், மத உரிமைகள், பெண் உரிமைகள், போன்ற, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை முழுமையாக இலங்கை பூராகவும் நடைமுறைப்படுத்த எம்மாலான முயற்சிகளை முன்னெடுப்போம்.

             எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வியல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சர்வதேச ரீதியில் பரிந்துரைக்கப்பட்ட படிமுறைகளை நடைமுறைப்படுத்த முன் நின்று உழைப்போம்.

             தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என சகல தரப்பினரையும் தனித்தனியாக வெகுஜன அமைப்பு ரீதியாக அணிதிரட்டி அவரவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்போம்.

             எங்கெல்லாம் வாழ்வியல், சமூக பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அந்த மக்களுக்கான உரிமைகள் முன்னுரிமைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காக நாம் அர்ப்பணிப்புடன் உழைப்பதோடு,…

             சமூக நீதிக்காகவும் முற்போக்கு சிந்தனைகளின் வளர்ச்சிக்காகவும் நாம் உறுதியுடன் உழைப்போம் என எமது தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கிறது.

ஊடக சுதந்திரம்!

             எமது வரலாற்றை வழி நடத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் ஊடக தர்மத்தின் அடிப்படையில் நின்று  மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்கா எமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க உறுதிகொள்வோம்.

உரிமைகளை வென்றெடுக்க ஐக்கிய முன்னணி!

             மேற்கூறிய எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை இதுவரை காலமும் அரசியல் பலத்தோடு இருந்தவர்கள் இழந்துவிட்ட நிலையில் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வரலாற்றுக் கடமைகளை நாமே சுமக்கவேண்டிய பொறுப்பை நாம் உணர்கின்றோம்.

             அதற்காக நாம் தனியொரு கட்சியாக மட்டுமன்றி  எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி பொது உடன்பாட்டின் அடிப்படையில் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனான  ஐக்கிய முன்னணி ஒன்றை அமைத்து எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்காகவும் ஒன்றுபட்டு உறுதியுடன் உழைப்போம்.

             எமது மக்களின் விடியலுக்காக எங்கள் நிலத்தில் மக்கள் பலத்தில் எழுந்து நின்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியாகிய ஈ.பி.டி.பி எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உன்னத வழிகாட்டலுடனும் உரத்த சிந்தனையுடனும் உறுதியுடன்; ஒன்றுபட்டு உழைக்கும் என எமது  தேசிய எழுச்சி மாநாடு பிரகடனம் செய்கின்றது.

             எமது புனித இலட்சியப்பயணத்தில் எம்முடன் கூடவே நடந்து…

தமது இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த எமது தோழர்களுக்கும் அனைத்து இயக்க போராளிகளுக்கும் தலைவர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் நாம் எடுத்திருக்கும் இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி காட்டுவதே ஆகும்.

                சொல்வதை செய்வோம்!

                செய்வதை சொல்வோம்!!

                மத்தியில் கூட்டாட்சி!

                மாநிலத்தில் சுயாட்சி!!

                நாம் செல்லும்

                பயணம் வெல்லும்.

                என்றும் நாம் மக்களுக்காக!……

viber image (2) 5 2 (5)

Related posts:

வடக்கில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துவிட்டது- தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டக்ளஸ் எ...
மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்...
கடந்த அரசின் அடிப்படைவாத மதகுருமார்களுக்கு பாடம் புகட்டியே இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் இந்த ...

வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!
தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார்...
ஜனாதிபதி தலைமையில் குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும்; முன்னேற்றம்காணும் - அமைச்சர் டக்ளஸ்...