இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, January 8th, 2019

இந்த நாட்டில் தற்போதைய நிலையில் ஆறு மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகம் இல்லாத நிலையில் அவை உள்ளிட்ட 8 மாகாண சபைகளுக்கென ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நிர்வாகமற்ற அரசியல் சபைகளில் அதிகாரிகளின் நிர்வாகமே முன்னெடுக்கப்படும். ஆனால், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றியிருந்தவர்கள் ஆளுநர் பதவிக்கென நியமிக்கப்படுகின்ற நிலைகளில், அதிகாரிகளின் நிர்வாகம் என்பதற்கு மாற்றமானதொரு நிர்வாகத்தினை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்.

இன்று வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அத்தகையதொரு நிலையினையும் காணக்கூடியதாக இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இராஜந்திர சிறிப்புரிமைகள் தொடர்பில் கூறுகின்றபோது, இந்த சிறப்புரிமைகள் தொடர்பில் கடந்த வருடத்தில் ஒரு கேள்வி நிலை ஏற்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதாவது அமெரிக்க தூதுவராக செயற்பட்டிருந்த சாலிய விக்கிரமசூரியவினது சிறப்புரிமைகள் தொடர்பிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

எனவே, இத்தகைய சிறப்புரிமைகள் தொடர்பில் நாட்டுக்கு நாடு, ஆளுக்காள் மாறுபட்ட நிலைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மேலும், இராஜதந்திர பணிகளில் தமிழ் பேசும் சமூகங்களின் பங்களிப்பு என்பது இந்த நாட்டில் புறக்கணிப்பிற்கு உட்பட்டே வந்துள்ளது. இது தொடர்பில் நான் ஏற்கனவே இந்தச் சபையில் எடுத்துரைத்துள்ளேன்.

கடந்த வருடம் இந்த நிலையில் சில மாற்றஙகள் கொண்டுவரப்பட்டு, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சார்ந்த சிலர் இராஜதந்திரப் பணியில் இணைக்கப்பட்டுள்ள போதிலும், இது போதுமானதாக இல்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புவதுடன், இலங்கையின் இராஜதந்திரப் பணியில் போதியவு தமிழ், முஸ்லிம் மக்களும் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

Related posts:

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
நடந்தவை நடந்ததாகே இருக்கட்டும். நடக்கப் போவது நல்லதாக அமையட்டும்- முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தே...
சேதன பசளைகள பயன்பாட்டில் சில இடையூகள் இருந்தாலும் சில காலத்தில் அதுவே சிறந்ததாக அமையும் - அமைச்சர் ட...