அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன்.

தமது உறவுகளை பறி கொடுத்த துயரில் வதைபடும் சகலருக்கும் எனது ஆழ்மன அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு காயப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரும் சுக நலத்துடன் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றும் நம்பிக்கையுடன் எதிர் பார்க்கிறேன்.

எமது இலங்கைத்தீவு முழுவதுமே எதிர் கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலை ஒன்றில், அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டியிருப்பதன் அவசியத்தை நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் தவிர்க்க முடியாத இந்த சூழலை நானும்; உணர்ந்து கொள்கிறேன்.

ஆனாலும் இந்த அவசரகாலச் சட்டமானது எந்த நோக்கத்திற்காக பிரகடனப்படுத்தப்படுகின்றதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

அழகிய எங்கள் இலங்கைதீவு இரத்தத்தீவாக உருவெடுத்திருந்த காட்சிகள் இன்னமும் மறையவில்லை. எமது மக்கள் எதிர்கொண்டிருந்த இழப்புக்களுக்கும், வலிகளுக்கும், வதைகளுக்கும், இரத்தப்பலிகளுக்கும்  இன்னமும் உரிய நீதியும், பரிகாரம் தேடப்படவில்லை.

இந்நிலையில் எமது மக்களிடமிருந்து மீண்டுமொரு அழுகுரல் ஓலம் இன்று எழுந்திருக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் நடந்தப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட மக்களில் தமிழர்களே அதிகமானர்களாக இருப்பினும் மனித உயிர்கள் என்ற வகையில் அனைத்து மக்களின் இழப்புக்களுமே சமனானவை. அதேவேளை தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறிப்பாக தமிழ் மக்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றார்களா? என்ற சந்தேகமும் இன்று தமிழ் மக்களிடையே எழுந்துள்ளதையும் இச்சபையினுடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

நடைபெற்ற சம்பவங்களில் இளம் குருத்துக்களும் குருதியில் சரிந்து கிடக்கும் காட்சிகள் எமது மனங்களை உலுக்கியிருக்கின்றது. கிறிஸ்தவ மக்களின் புனித நாளொன்றில் நிகழ்ந்த வன்முறை வேள்வி மனித மனங்களையே வதை வதைத்திருக்கின்றது!..

யுத்தம் முடிந்து அமைதியாக இருந்த இலங்கைத்தீவின் அழகை இரசிக்க வந்த பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இதில் பலிகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த வன்முறைகள் இலங்கைத்தீவை மட்டுமன்றி உலக மக்களின் மனங்களையே உலுக்கியிருக்கின்றது. இன்னமும் எங்கு, எப்போது, எது நடக்குமோ என்ற அச்சத்தில் எமது மக்கள் உறைந்து கிடக்கின்றார்கள்.

உலகத்தின் பார்வைகள் யாவும் இன்று இலங்கைத்தீவின் பக்கமே திரும்பியிருக்கும் நிலையில், மனிதப் பலிகளை நடத்தும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்புகள் யாவும் அரசாங்கத்தின்  கைகளில் மட்டுமே தங்கியிருக்கின்றது. ஆனாலும், கொடிய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதின் பெயரால் அப்பாவி மக்களை ஒடுக்கும் கைங்கரியங்கள் இங்கு நடக்காது பாதுகாப்பதும் அரசின் பொறுப்பேயாகும்.

களைகளைப் பிடுங்கி எறிவதற்கு மாறாக பயிர்களையும் சேர்த்து பிடுங்கி எறியும் கைங்கரியங்கள் இங்கு இனியும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். கடந்த கால வரலாற்றில் இவைகளும் நடந்தேறின என்பதையும் இங்கு நான் ஞாபாகப்படுத்த விருப்புவதுடன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த அவசரகால நிலைக்கு ஒரு மனித முகம் இருக்க வேண்டும் என  வலியுறுத்த விரும்பகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

நாம் வெற்றிபெறும் பட்சத்தில் உங்களுடைய எண்ணக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் - பூந்தோட்டத்தில் டக்ளஸ் எ...
எங்கள் மக்களின் இழப்புக்களுக்கு, இழப்பீட்டுக்கொடுப்பனவுகள் ஆறுதலாகவே இருக்கும். அமைச்சர் டக்ளஸ் தேவ...
வடகடல் நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்: நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆ...