நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் ஐந்து ….!

Sunday, August 14th, 2016

புலிகளின் தலைவர் பிரபா பச்சைக்கொடி காட்டவேண்டும்! குரல் எழுப்பினார் டக்ளஸ்!!…

தாமதத்திற்கு முதலில் வருந்துகிறேன்.வந்து குவியும் வாழ்த்துக்களுக்கும்,. விமர்சனங்களுக்கும் நன்றி தெரிவித்தே ஆக வேண்டும்….ஆரோக்கியமான விமர்சனங்களே  இத்தொடரை ஊக்குவிக்கின்றன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தகவலோடு கொழும்புக்குப் புறப்படத் தயாரானார்கள் இரண்டு தூதுவர்கள். அவர்கள் இருவரும் கொழும்புக்கு வரப்போவதையோ தனக்குத் தகவல் கொண்டு வரப்போவதையோ அப்போது
ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானாந்தா அறிந்திருக்கவில்லை. அப்போது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஈ.பி.டி.பி இருந்தது.

அமைச்சுப் பொறுப்பை ஏற்க வருமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா அழைப்பு விடுத்திருந்த போதும் டக்ளஸ் தேவானந்தா அதை ஏற்றிருக்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்கான அனுபவங்களைக் கற்றுக்கொள்வதற்காக வெவ்வேறு நாடுகளுக்கு சந்திரிக்கா அரசு நாடாளுமன்றக் குழுக்களை அனுப்பத் தீர்மானித்திருந்தது.

அதன் படி,…….. வட அயர்லாந்து பிரச்சினை குறித்து கற்றுக்கொள்ள அயர்லாந்திற்கும்….. ஆச்சே மக்களின் பிரச்சினை குறித்து கற்றுக்கொள்ள இந்தோனேசியாவுக்கும்…….. சைபிரஸ் மக்களின் பிரச்சினை குறித்து கற்றுகொள்ள கிறீஸ் நாட்டுக்கும்……… அந்த நாடாளுமன்றக் குழுக்கள் சென்று வந்தன.இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் சென்றிருந்த நாடாளுமன்ற குழுக்களிலும் ஈ.பி.டி.பி கட்சி சார்பாக அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பங்கெடுத்திருந்தார்.

புளொட் தலைவர் சித்தாத்தன் அவர்களும் அவைகளில் பங்கெடுத்திருந்தார்.வட அயர்லாந்திற்கு சென்று திரும்பி வரும்போது நாடாளுமன்றக் குழு இலண்டனை சென்றடைந்தது.
வழமை போல் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை வரவேற்க அவரது இலண்டன் பிராந்தியக் கட்சி உறுப்பினர்கள் அங்கு காத்திருந்தனர்.

தலைவரைக் கண்ட அவரது தோழர்கள் ஆரத்தழுவி முத்தமிட்டனர். வரவேற்று அவரை அழைத்துச் சென்றனர்.டக்ளஸ் தேவானந்தா எந்த நாடு சென்றாலும் அந்த நாடுகளின் உள்ளூர் தொலை பேசி இலக்கம் ஒன்றைப் பாவிப்பது வழக்கம். அதேவேளை அவரது இலங்கை தொலைபேசி இலக்கமும் எப்போதும் தொடர்பில் இருக்கும்.

அப்போது தமிழர் தகவல் நிலையம் என்ற ஒரு அமைப்பு இலண்டனில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அதன் முதல்வராக இருந்தவர் வரதகுமார். ஆங்கிலத்தில் இந்த அமைப்பை TIC என்றே அழைப்பார்கள். இந்த அமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பு என்றே அப்போது சகலரும் பேசிக்கொள்வார்கள். டக்ளஸ் தேவானந்தாவை வரதகுமார் சந்திக்கும் தருணங்களில் இந்த அமைப்பை Tigers information center என்றும் ஆகவேதான் இது TIC என்று சொல்லப்படுகிறது என்று தனது பாணியில் டக்ளஸ் தேவானந்தா சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.உண்மையில் TIC என்பதன் அர்த்தம் Tamil information Center என்பதே ஆகும்.

இலண்டனில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இலண்டன் உள்ளூர் தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.வரதகுமாரின் தமிழர் தகவல் நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்திருக்கினம்….. சந்தித்தால் என்ன தோழர்?…

அப்படியா?… ம்.. ம்.. ம்… என்று வழமைபோல் சற்று யோசித்துவிட்டு,…..சந்திக்கலாம் என்றார் டக்ளஸ் தேவானந்தா.அந்த இடத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சுற்றி அவரது இலண்டன் தோழர்களும் ஆதரவாளர்களும் இருந்தனர்.

தோழர்!… அவர்கள் புலி அமைப்பு,…… என்றனர் அங்கிருந்த சிலர். அதற்கென்ன?… அவர்களோடுதான் பேச வேண்டிய தேவை இருக்கு. உடன்பட்டவர்களோடு பேசுவது மாத்திரமல்ல முரண்பட்டு நிற்பவர்களோடும் பேசுவதுதான் நல்லது என்று விளக்கம் கொடுத்தார் டக்ளஸ் தேவானந்தா. டக்ளஸ் தேவானந்தாவிடம் கூடவே பிறந்த குணம் ஒன்று உண்டு. நடைமுறை சார்ந்து சிந்திக்க வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தாலும்,…

சவால்களுக்குள் இறங்கி சதிராடுவதில் அவருக்கு அலாதிப்பிரியம். ஆகவேதான் எதிர்ப்புக்கள் வரும் என்று தெரிந்து கொண்டும் தனது தோழர்கள், மற்றும் ஆதரவாளர்களின் உடன்பாட்டோடு அந்த சந்திப்புக்கு தயாரானார் டக்ளஸ் தேவானந்தா.

அந்த அரசியல் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவே இருந்தனர். பொதுவான அரசியல் நிலைப்பாட்டை கொண்டவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

தாயகத்தில் நடக்கும் அரசியல் நிலவரங்கள் குறித்து டக்ளஸ் தேவானந்தா முதலில் விளக்கம் கொடுத்தார்.அழிவு யுத்தம் எமது மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அந்த அவலமே தொடரப்போகிறது என்று கள நிலை யதார்த்தங்களை எடுத்துரைத்தார் டக்ளஸ் தேவானந்தா.

அப்படியென்றால் இப்போது என்ன செய்ய வேண்டும்?.. குரல் எழுப்பினார்கள் கூட்டத்தில் இருந்தவர்கள்.யுத்தம் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே தரும். இப்போதும் அழிவுகள் தொடர்வதற்கான ஒரு அவலச் சூழலே உருவாகியிருக்கிறது.

அரசாங்கம் யாழ் குடாநாட்டின் மீது பாரிய படையெடுப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.
அப்படி நடந்தால் இன்னும் அங்கு அழிவுகளே மிஞ்சும்….. யாழ் குடாநாட்டின் மீதான படை நகர்வையும் அழிவுகளையும் என்னால் தடுத்து நிறுத்த முடியும் என்றார் டக்ளஸ் தேவானந்தா. ஆனாலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அதற்குப் பச்சைகொடி காட்டவேண்டும். சில உடன்பாடுகளுக்கும் அவர் வரவேண்டும் என்றார் டக்ளஸ் தேவானந்தா.

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகத்தானே ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள்… என்றனர் இடையில் குறுக்கிட்ட சிலர். நாமும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களே. ஆனாலும் எமக்குள் உருவாகியிருக்கும் சகோதரச் சண்டைகளும், உள்ளியக்க மோதல்களும் மாறிவந்திருக்கும் உலகத்தின் போக்கும் நாம் ஒரு அரசியல் தீர்வு நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தையே எமக்கு உணர்த்தியது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை ஏற்று செயல்படுத்தியும் இருக்க வேண்டும். அதைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கவும் வேண்டும்.

அது முழுமையான தீர்வு அல்ல. ஆனாலும் அதிலிருந்து எமது இலக்கு நோக்கிச் சென்றிருக்கலாம். ஆனாலும் அது நடக்கவில்லை…… என்றார் டக்ளஸ் தேவானந்தா.ஆயுதப் போராட்டத்தின் தேவை எமக்கு இருந்தது என்பது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனாலும் ஆயுதங்கள் என்பது ஒரு வாத்தியாரின் கையில் இருக்கும் பிரம்பின் அடையாளமாக இருக்க வேண்டிய சூழல் ஒன்று உருவாக்கி விட்டது……. என்றார் டக்ளஸ் தேவானந்தா.

உண்மையில் டக்ளஸ் தேவானந்தா சொல்வதில் நியாயம் உண்டு என்றனர் கூட்டத்தில் இருந்த சிலர். “காற்றுள்ள போதே தூற்றிகொள்” என்பது போல் உரிமைப் போராட்டத்திற்கு வெளியுலக ஆதரவு இருந்த போதே,…அந்த அழுத்தத்தில் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி நாம் இறுதி இலக்கு நோக்கிச் சென்றிருக்க முடியும்.

இலங்கை இந்திய ஒப்பந்த கால சூழலில் இந்தியாவின் அனுசரணை மட்டுமன்றி சர்வதேசத்தின் ஆதரவும் எம் பக்கமே இருந்தது.அதைப் பயன்படுத்தாமல் விட்டது மாபெரும் வரலாற்றுத்தவறு என்று விளக்கம் கொடுத்தார் டக்ளஸ் தேவானந்தா,

அது சரி….டக்ளஸ் தேவானந்தா புலிகளின் தலைவரிடம் இருந்து எதிர்பார்த்த பச்சைக் கொடியின் அர்த்தம் என்ன?..விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சில உடன்பாடுகளுக்கு வரவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா அந்தக் கூட்டத்தில் கேட்டிருந்தார் அல்லவா?..

எத்தகைய உடன்பாடுகளுக்கு பிரபாகரன் வரவேண்டும்?.. இவைகளுக்கு டக்ளஸ் தேவானந்தா அளித்த விடைகளோடு மறுபடியும் அடுத்த தொடரில் சந்திப்போம். இன்னொரு சுவாரசியமான சம்பவமும் உண்டு.அது ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் புளொட் தலைவர் சித்தார்த்தனும் சம்பந்தமானது.

இந்த இரு தலைவர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வின் அனுபவங்களைக் கற்றுக்கொள்ளச் சென்ற கிறீஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் ஆயுதம் ஏந்தி மோதிக்கொண்டனர்.

தகவல்களுக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்கவும்.

நன்றி – நக்கீரா முகநூல்.

உண்மைகள் தொடரும்…..!

 

Related posts: