நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் நான்கு ….!

Saturday, July 16th, 2016

சந்திரமோகனின் கேள்வியால் திகைத்துப்போன பொட்டம்மான்!....

நெருக்கடி மிகுந்த ஒரு சூழலின் போதுதான் பொட்டம்மானும் நடேசனும் சந்திரமோகனையும் பொன் மதிமுகராஜாவையும் அழைத்து  பேசிக்கொண்டிருந்தனர்.

இன்னும் சில நாட்களில் பலாலி படை தளத்தில் இருந்து இடி முழக்கம் முழங்கப்போகிறது. அப்போது பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அனுரத்த ரத்வத்த. அவர் பலாலி படைத்தளத்திலேயே வந்து குடி கொண்டு விட்டார்.

பலாலி படைத்தளத்தில் இருந்து வசாவிளான் பத்தமேனி அச்சுவேலி புத்தூர் ஆவரங்கால் நோக்கி பாரிய படை நகர்வை முன்னெடுப்பதுதான் படையினரின் திட்டம். அதிலிருந்து கட்டம் கட்டமாக யாழ் குடாநாட்டை கைப்பற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன.

இந்த இக்கட்டான சூழலில் அந்த சந்திப்பு யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறது. சந்திரிகா அரசு இந்த படை நகர்வை நிறுத்த வேண்டும். அதற்கு டக்ளஸ் தேவானாந்தா உதவ வேண்டும். அதுதான் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவுப்படி பொட்டம்மானும் நடேசனும் அந்த சந்திப்பை நடத்திக்கொண்டிருந்தனர்.

யுத்தத்தை நிறுத்தி புலிகளும் அரசும் மீண்டும் அரசியல் பேச்சு மேடைக்கு வரவேண்டும் என்று ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அந்த நேரத்தில் இரு தரப்பிடமும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்தார்.

இது புலிகளின் தலைமைக்கு தெரியும்.இந்த நம்பிக்கையில்தான் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தூதனுப்ப புலிகளின் தலைவர் பிரபாகரன் திட்டமிட்டிருந்தார். ஆனாலும் பொட்டம்மானும் நடேசனும் அந்த சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்களில் ஒரு தற்காலிக போர்த்தவிர்ப்பை புலிகள் விரும்புவதாகவே சந்திரமோகனும் மதிமுகராஜாவும் உணர்ந்து கொண்டனர்.

எந்த நம்பிக்கையோடு நாம் டக்ளசுடன் பேசுவது?.. உங்களது கருத்தை நம்பி நாம் பேசலாமா?.. இப்படி கேட்டார் பொட்டம்மானிடம் சந்திரமோகன். இந்த கேள்வியால் திகைத்துப்போனார் பொட்டம்மான். என்னிடமே கேள்வியா?.. இப்படி பொட்டம்மான் நினைத்தரோ என்னவோ கொஞ்சம் உரத்த தொனியில் பேச முற்பட்டார் பொட்டம்மான்.

இது தலைவரின் உத்தரவு. தலைவர் உங்களுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளார். நீங்கள் தாரளமாக இந்த விடயம் குறித்து நம்பிக்கையோடு பேசலாம்.நாங்களும் அவர்களும் ஒன்றுதான். இதை தலைவரே சொல்லுகிறார்.

நீங்கள் தயக்கமின்றி டக்ளசுடன் பேசுங்கள் என்றார் பொட்டம்மான். பொட்டம்மானின் பேச்சை கேட்டதும் சந்திரமோகனும் பொன் மதிமுகராஜாவும் ஆச்சரியமாக பார்த்தனர்.

சில வினாடிகள் ஜோசித்து விட்டு நாங்களும் இந்த படை நகர்வை விரும்பவில்லை. நாங்கள் கொழும்பு சென்று இது பற்றி பேச தயார்  என்றார் பொன் மதிமுகராஜா.

இடையில் குறுக்கிட்டார் நடேசன். நீங்கள் கொழும்பு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை உடனடியாகவே செய்கிறோம். இப்படி நடேசன் கூறியதும் சந்திரமோகனும் மதிமுகராஜாவும் ஆளை ஆள் பார்த்துக்கொண்டனர். மெளனம் சம்மதமானது. இருவரும் கொழும்பு செல்ல சமிஞை காட்டி விட்டனர்.

மேசையின் மீது கொண்டு வந்து வைக்கப்பட்ட தண்ணீரையும் உழுந்து வடையையும் நால்வரும் சுவைக்க தொடங்கினர். பொட்டம்மான் காரசாரமான சாப்பாட்டு பிரியன். அடிக்கடி ஆட்டு இரத்தம் வறுத்து சாப்பிடுவார்.

அவருக்கு மிகவும் பிரியமான சாப்பாடு அதுதான். அங்கு பரிமாறப்பட்ட காரமான உழுந்து வடையை சுவைத்துக்கொண்டே பொட்டம்மான் பேசிக்கொண்டிருந்தார்.

கையோடு நீங்கள் இருவரும் கொழும்பையும் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்து வர இது ஒரு வாய்ப்பு என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பொட்டம்மான். இதை கேட்டதும் அந்த சந்திப்பு மேசையில் சிரிப்பொலி எழுந்தது.

சந்திரமோகனும் பொன்மதிமுகராஜாவும் அங்கிருந்து விடை பெற்று சென்றனர். தூதர்களின் கொழும்பு நோக்கிய பயணத்திற்கு என்ன நடந்தது?.. சுவாரசியமான உண்மை தகவல்களோடு மறுபடியும் அடுத்த பதிவில் சந்திப்போம்..

நன்றி – நக்கீரா முகநூல்.

உண்மைகள் தொடரும்…..!

Related posts: