நக்கீரா முகநூல் சொல்லும்   வெளிவராத உண்மைகள்! பாகம் இரண்டு ….!

Friday, July 8th, 2016

பொட்டம்மானும் நடேசனும் சொன்ன செய்தியால் அதிர்ந்து போன தூதர்கள்!…

அந்த சம்பவம் நடந்தது 1995 இல்.  1995 அக்டோர் 17 இல் சூரியக்கதிர் படை நகர்வு ஆரம்பமானது. 1996 ஏப்ரல் வரை சூரியக்கதிர் 2 என்றும் அது தொடர்ந்தது.  அதுதான் தென்மராட்சி படை நகர்வு,

ஆனாலும் விடுதலைப்புலிகளின் தலைமை 1995 இலேயே  யாழ் குடாநாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டது இது குறித்து இன்னமும் வெளிவராத பல இரகசியங்கள் உண்டு. அவற்றை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

புலிகளின் தலைவர் சொன்ன செய்தியைக் கொழும்பில் இருந்த ஈ.பி.டி.பி தலைவருக்கு அனுப்பியாக வேண்டும். அதற்காக இருவரை தெரிவு செய்து அவர்களை அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பி விட்டுக் காத்திருந்தனர் பொட்டம்மானும் நடேசனும்.

அந்த இருவரும் யாழ் பழைய பூங்காவில் இருந்த புலிகளின் காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அனைவராலும் அறியப்பட்ட அந்த இருவருக்கும் தாம்  எதற்காக அழைத்து வரப்படுகிறோம் என்பது தெரியாமலே இருந்தது.

கொழும்புக்கு தூதனுப்ப அழைத்து வரப்பட்ட அந்த இருவரில் ஒருவர் பொன் மதிமுகராஜா. ஆரம்ப கால இளைஞர் பேரவையில் அங்கம் வகித்தவர். இவர் அனைத்துலக எம். ஜி. ஆர் பேரவை தலைவராக இருந்தவர். அகில இலங்கை எம்.ஜி.ஆர் மன்றத்தலைவராகவும் இவரே இருந்தவர்.

(பின்னர் நல்லூர் பின் வீதியில் பொன் மதிமுகராஜா கூட்டம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டவர்).
அடுத்தவர் சந்திரமோகன். யாழ் சங்கானையை சேர்ந்தவர்.

ஆரம்பகால ஈழ விடுதலை இயக்கத்தின் (ஈ.எல்.ஒ) தலைமைக்குழு உறுப்பினராக இருந்தவர். ஈழ விடுதலை இயக்கம் என்றவுடன் பின்னாளில் வந்த தங்கத்துரை குட்டிமணி மற்றும் சிறிசபாரட்னம் ஆகியோரின் ரெலோ இயக்கம் என்று யாரும்  எண்ணி விட வேண்டாம். இது அதற்கு முன்னர் தோன்றிய இன்னொரு விடுதலை இயக்கம்.

இந்த இயக்கம் தீவிரமாகச் செயற்பட்ட 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற புலோலி வங்கிக் கொள்ளையுடன் தொடர்புபடுத்திக் கைது செய்யப்பட்ட  பலரில் சந்திரமோகன் முக்கியமானவர் ஆவார்.

மதிமுகராசாவும் சந்திரமோகனும் தமிழர் விடுதலைக் கூட்டணி, இளைஞர் பேரவை ஆகியவற்றின் முக்கிய மேடைப் பேச்சாளர்களாகத் திகழ்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன் மதிமுகராஜாவும் சந்திரமோகனும் ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப ஈடுபாட்டைக் கொண்டிருந்த்தவர்கள் என்பதால் ஈழப்போராட்ட ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக இருந்த ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இவர்கள் நெருக்கமாக இருந்தனர்.

ஆகவேதான் தூதனுப்ப இந்த இருவரையும் புலிகள் அமைப்பினர் தேர்ந்தெடுத்தனர். அழைத்து வரப்பட்ட இருவரையும் உட்காரவைத்து பொட்டம்மானும் நடேசனும் அவர்களோடு பேச தொடங்கினர்….

என்ன பேசினார்கள்?

தகவல்கலோடு மீண்டும் மறு பதிவில் சந்திப்போம்… பதிவுகளின் தொடர் வெளிவர தாமதமாவது கண்டு வாசகர்கள் அவசரத்தில் ஆர்வப்படுவது புரிகிறது. வெளிவரும் தகவல்கள் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே தாமதங்களின் காரணம்.

நன்றி – நக்கீரா முகநூல்.

உண்மைகள் தொடரும்…..!


ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 12
ஈழ இதிஹாசத்தின் மனிதாபிமான அடையாளம் - தோழர் டக்ளஸ் தேவானந்தா - 13
தேவாவின் முகநூல் சொல்லும் வரலாற்று தொடர்- “ஈழப் போராட்டத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்” – தொடர். 06   
ஈழப் போராட்டத்தில் மனிதாபிமான அடையாளம் -  தோழர் டக்ளஸ் தேவானந்தா - 15
நக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்! பாகம் நான்கு ....!