விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் தொழில்நுட்ப துறைக்குத் தாவல் – விஞ்ஞான துறையில் வீழ்ச்சிக்கு காரணம்!

வடக்கு மாகாணத்தில் விஞ்ஞான துறையில் தேர்ச்சி உடைய தமிழ் மாணவர்களில் அதிகமானவர்கள் தொழில்நுட்பவியல் துறையைத் தேர்வு செய்வதாலேயே விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்கின்றது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்ததாவது;
இலங்கையின் கல்வித் திட்டத்தில் ஜீ.சீ.ஈ. உயர்தர மாணவர்களின் பாடத்திட்டத்துக்குள் தொழில்நுட்பவியல் கற்கை நெறியும்அண்மையில் உள்வாங்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் தொழில்நுட்ப துறையை வளர்ப்பதற்கும், கலைப் பிரிவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அவர்களைத் தொழில்நுட்பத் துறைக்குள் உள்ளீர்ப்பதுமே, இந்தத் துறை உள்வாங்கிய தன் முதன்மை நோக்கங்களாக உள்ளன.
ஆனால் வடக்கு மாகாணத்தில் விஞ்ஞானத் துறையில் தேர்ச்சி உடைய அதிகளவான மாணவர்களே தொழில்நுட்பத் துறைக்குளும் செல்கின்றனர். இதனால் விஞ்ஞானத் துறையைத் தெரிவு செய்யும் மாணவர்களின் வீதம் குறைவடைந்து செல்கின்றது. அதேநேரம் கலைத்துறைக்குத் தோற்றும் மாணவர்களின் வீதத்தில் அல்லது கலைத்துறையில் இருந்து வேறு துறைக்குச் செல்லும் மாணவர்களுக்கான வீதத்தில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
கலைத்துறையினர் தொழில்நுட்பத் துறையிலும், விஞ்ஞானத்துறை மாணவர்கள் விஞ்ஞானத் துறையையும் தெரிவு செய்யும்போதே எமது மாகாணத்தில் பல்கலைக்கழகங்களுக்குச் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையில் நாம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். தற்போதைய சூழ்நிலையில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே விஞ்ஞானத் துறைக்குத் தெரிவாகி வருகின்றனர்.
இந்நிலை மாற்றப்பட வேண்டும். கலைத்துறையைத் தெரிவு செய்யும் மாணவர்கள், தொழில்நுட்பத்துறையில் ஆர்வம் காட்ட வேண்டும். மாணவர்கள் அதற்கு முன்வர வேண்டும். இதற்கு பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அந்தத் துறையில் மாணவர்களை நாட்டம் கொள்ள வைக்க வேண்டும். இதனை மாயவர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்று கூறினார்.
Related posts:
|
|