வடமராட்சியில் மாடுகள் கடத்தல் – மக்கள் அதிருப்தி!  

Wednesday, July 4th, 2018

வடமராட்சியின் சில இடங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் இனந்தெரியாதோரால் இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன என்று பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள் கடத்தப்பட்டு அயலில் உள்ள பற்றைக்காடுகளில் வெட்டப்படுகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரிடம் முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை. கடத்தப்படும் மாடுகள் வெட்டப்பட்டு வடமராட்சிப் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளால் கடைப்பிடிக்கப்படும் மாடுகள் தொடர்பான எந்தவொரு நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படுவதில்லை. இந்தப் பகுதிகளில் இயங்கும் இறைச்சிக் கடைகள் தாம் நினைத்த இடத்திலும் இறைச்சிக் கடைக்குள்ளும் மாடுகளை வெட்டி இறைச்சியை விற்பனை செய்கின்றனர். உள்ளுராட்சி சபைகளால் கொல்கள வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்துள்ள போதிலும் இறைச்சிக் கடைகளைக் குத்தகைக்கு எடுப்போர் அதனைப் பயன்படுத்துவதில்லை.

ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளில் வெட்டப்படும் மாடுகள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மாடு பொதுவான இடத்தில் கட்டப்பட்டு கால்நடை மருத்துவரால் சிபார்சு செய்யப்பட்ட பின்னர் இறைச்சிக்காக வெட்டப்படல் வேண்டுமென்ற நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால் அவ்வாறான நடைமுறைகள் வடமராட்சிப் பிரதேசத்தில் இல்லை.

கடந்த ஏப்ரலில் உடுப்பிட்டிப் பகுதியில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் பழுதடைந்த இறைச்சி விற்பனை செய்தமைக்காக கடை சீல் வைக்கப்பட்டது.

இருவாரங்களுக்கு முன்னர் சந்தை ஒன்றில் இயங்கிய மாட்டிறைச்சிக் கடைக்குள் வைத்து பசு மாடு வெட்டியதற்காக சீல் வைக்கப்பட்டது.

இதன்பின்னர் மாட்டிறைச்சி இங்குள்ள உணவகங்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல் கிடைக்கின்றபோதிலும் அவை எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்று தெரியாது. இதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Related posts: