யாழ்.மாநகரசபை மண்டபம் புதுப்பிப்பு!

Monday, February 19th, 2018

யாழ்ப்பாண மாநகரசபையின் அமர்வு நடத்தப்படும் மாநாட்டு மண்டபம் வடக்கு மாகாணசபையின் மாநாட்டு மண்டபத்தின் சாயலை ஒத்த குட்டி வடக்கு மாகாணசபை மாநாட்டு மண்டபமாக அமைக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு இதுவரை 23 உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டு வந்தனர். புதிய தேர்தல் முறைமையின் ஊடாக 45 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டு மடங்காக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாநகரசபையின் மாநாட்டு மண்டபம் 23 உறுப்பினர்களுடன் சபை அமர்வை நடத்தக்கூடியதாகவே இதுவரை இருந்து வந்தது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக் காரணமாக சபை அமர்வை நடத்தும் மாநாட்டு மண்டபத்தை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த மாநாட்டு மண்டபத்தில் மேயர் மற்றும் பிரதி மேயருக்காக ஒதுக்கப்பட்ட அறைகளை சிறிதாக்கி மாநாட்டு மண்டபம் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் உறுப்பினர்களுக்கு தனித்தனியான மேசைகள், ஒலிவாங்கிகள் மாநகரசபை மாநாட்டு மண்டபத்தில் பொருத்தப்பட்டிருக்கவில்லை. தற்போது விரிவாக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தில் வடக்கு மாகாணசபையில் உள்ளதைப் போன்று ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தனித்தனியான மேசைகள் போடப்பட்டு ஒலிவாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சபை நிதி மற்றும் எஸ்.ரி.பி.திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியைப் பயன்படுத்தி மாநகரசபை மாநாட்டு மண்டபம் புதுப்பொலிவுடன்  விரிவாக்கப்பட்டுள்ளது.

Related posts: