யாழ்ப்பாணக் கல்வி வலயத்துக்கு பணிப்பாளரை நியமிக்காமைக்கு ஆளுநரே பொறுப்புக்கூற வேண்டும் – தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!
Thursday, December 20th, 2018நீதிமன்றத் தீர்ப்புக் கிடைத்த பின்னரும் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் பணிப்பாளரை நியமிக்காமைக்கு வடக்கு மாகாண ஆளுநரே பொறுப்புக்கூற வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.
யாழ்ப்பாணக் கல்வி வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமனம் செய்தது தவறு என்று தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் வழக்கை மீளப் பெற்றுக்கொண்டு விட்டார். தற்போது வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்கும் அதிகாரம் முழுதும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கே உரியது.
ஆனால் வடக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதலோடு நடைபெற வேண்டும் என்பதற்காக நியமனம் இழுபறி நிலையில் உள்ளது.
பணிப்பாளர் நியமிக்கப்படாமைக்கு வடக்கு ஆளுநரே பொறுப்பாகி விட்டார். எனவே பணிப்பாளர் நியமனத்தில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? அல்லது இன்னும் சில, பல மாதங்கள் இழுபறிநிலை நீடிக்குமா? என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதைவிட வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மாகாணத்துக்கான மேலதிகக் கல்விப் பணிப்பாளர்கள் இருவரின் வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
இவ்வாறு மாகாணக் கல்வித் திணைக்களமும் வலயக் கல்வித் திணைக்களங்களும் பொறுப்பானவர்கள் இல்லாமல் இயங்குவது மாணவர்களின் கல்வியை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றி எவரும் சிந்திப்பதாக இல்லை.
உரிய இடங்களுக்கு உரியவர்களை நியமனம் செய்ய வேண்டும். தவறின் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு முன்பாக அடுத்தவாரம் மௌனப் போராட்டம் நடத்தப்படும் என்றுள்ளது.
Related posts:
|
|