முன்னாள் எம்.பி.க்களுக்கு விஷேட சலுகை!

Thursday, November 23rd, 2017

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

262 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவியர்கள் 220 பேரும் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர்.

இவர்களுக்குக் கடந்த மாதம் தொடக்கம் மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அரசுக்கு 26.2 மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்கள் இந்த ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தகுதி வாய்ந்தவர்களாவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் பெறும் ஆகக் குறைந்த ஓய்வூதியம் 18 ஆயிரத்து 95 ரூபாவாகும். 15 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருக்கு 36 ஆயிரத்து 190 ரூபா ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அமைச்சரவை முடிவுக்கு அமையவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குறைகளைச் சபாநாயகருக்கு எடுத்துக் கூறியிருந்ததுடன் தமக்குக் குறைந்தளவு ஓய்வூதியமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். சபாநாயகர் இதனை அரசிடம் தெரிவித்ததை அடுத்தே அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்

Related posts: