புலிகள் போர்குற்றங்கள் செய்தனர்: அமைச்சர் சஜித்!

Wednesday, September 13th, 2017

புலிகள் மட்டும் தான் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். பாதுகாப்புப் படையினர் மூன்று தசாப்தகால போரை முடித்து வைத்த நாட்டில் அமைதியை உருவாக்கினார்கள். இவ்வாறு வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திம்புலாகலவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

எமது போர் வீரர்கள் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் எவருமே அப்படியான குற்றங்களைப் புரியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் தான் போர்க்குற்றங்களை இழைத்தார்கள். பாதுகாப்புப் படையினர் மூன்று பத்தாண்டுகாலப் போரைமுடித்து வைத்து அமைதியை உருவாக்கினார்கள்.

போர்க்குற்றங்களுக்காக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே தவிர தாய் நாட்டை விடுவிப்பதற்காக சண்டையிட்ட போர்வீரர்களையல்ல.

எமது போர் வீரர்கள் எவரையும் கைது செய்வதற்கு அரசு அனுமதிக்காது. போர்வீரர்களைப் போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லப் போவதாக எதிர்க் கட்சியைச் சேர்ந்த சிலர் கூச்சலிடுகின்றனர். அவர்கள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் நோக்கம் போர்வீரர்களைப் பாதுகாப்பது அல்ல. மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாக்குகளைப் பெறுவதே அவர்களின் நோக்கம் – என்றார்.

இதனிடையே இராணுவத்தின் தளபதிகள் சிலர் போர்க்குற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: