பிரபாகரன் முன் ஓடி ஒளிந்தவர்கள் இன்று போலித் தேசியம் பேசித்திரிகிறார்கள் – சரத் பொன்சேகா!

Thursday, November 2nd, 2017

பிரபாகரன் உயிருடன் இருக்கும் போது தேசத்துக்காகப் போராட முன்வராமல் ஓடி ஒளிந்தவர்கள் இப்போது தேசப்பற்றுள்ளவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு போராட்டம் செய்கின்றனர் என அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தினர். இவர்களின் மிரட்டலுக்கு நாம் பயப்படப்போவதில்லை. எமது நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அரசமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கையில் பெரும்பான்மையினத்தவர் சிங்களவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. என்றாலும் ஓர் இனம் மற்றொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது. அனைத்து இனங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும்.

போரின் போது கைது செய்தவர்களை நாம் சித்திரவதை செய்யவில்லை. அவர்களுக்கு இராணுவத்தின் மருந்து, சாப்பாடுகளை வழங்கினோம். அவர்களுக்கு நாம் மறு வாழ்வு வழங்கினோம். சில இராணுவத்தினரால் அநியாயங்கள் நடந்தன. எமக்கே அது பாதிப்பாக வந்துள்ளது. இவர்கள் ஆட்சியாளர்களின் கட்டளைப்படி செயற்பட்டவர்களாவர்.

அரசமைப்புக்கு எதிராக ஒரு சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போர் நடந்து கொண்டிருந்த போது பிரபாகரன் நாட்டை பிளவுபடுத்தும் போது நாட்டின் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. தற்போது கூலிப்பணத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர்களுக்கு அஞ்சி நாம் எமது பயணத்தை நிறுத்தமாட்டோம். தொடர்ந்து பயணிப்போம்.

நாட்டில் அரச தலைவர் முறைமை இருக்கக்கூடாது என்று தீர்மானம் எடுத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை மதிக்கின்றேன். அரச தலைவர் முறைமை இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அது நாட்டின் பாதுகாப்புக்குச் சிறந்த ஏற்பாடாக அமையும்.

போரின் போது உயிருக்கு அஞ்சி எனக்கு அலைபேசி அழைப்பு விடுத்து கொண்டு இருப்பவர் இப்போது நாடாளுமன்றத்துக்குக் குண்டு போடப் போகின்றாராம். இவ்வாறு கதைத்தவர்களின் உடல் இனங்காணமுடியாமல் துண்டு துண்டாகச் சிதறியது. இப்போது கதைப்பவரும் அதனைத்தைத் தான் விரும்புகின்றார் போல் தெரிகின்றது  – என்றார்.

Related posts:


வரலாற்று பிரசித்திபெற்ற சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம் - காவடிக்கு முற்றாகத் தடை - சுகாதார ம...
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து கடன்பெற நிதி அமைச்சு பேச்சுவார்த்தை - எரிசக்தி அமைச்சர் ...
தொடர்ந்து பெய்யும் சீரான மழைவீழ்சி - நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு என இலங்கை மின்சார சபையின் பேச்சாள...