பண மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் இருவர் பணிநீக்கம்: இருவர் தண்டனை இடமாற்றம்!

Friday, March 2nd, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் சமுர்த்திக் கடன் வசூலிப்பில் மோசடியில் ஈடுபட்ட நான்கு உத்தியோகத்தர்களுக்கு தற்காலிக பணி நிறுத்தம் மற்றும் தண்டனை இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்கு பிரதேசங்களில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பழைப் பகுதியில் குழுக் கடன் மற்றும், தனிநபர் கடனை வசூல் செய்யும் சமுர்த்தி உத்தியோகத்தர் அந்தப் பகுதியில் மக்கள் பெற்றுக்கொண்ட கடன் தொகையின் மாதப் பணத்தினை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பணத்தை வாங்கிய பின்னர் அவர்களுக்கான பற்றுச்சீட்டை வழங்காமல் வந்துள்ளார். கடன்களை கொடுத்தவர்கள் மாதாந்தக் கடன் தொகையை செலுத்தாமல் உள்ளனர் என்று சமுர்த்தி வங்கியால் தெரியப்படுத்தப்பட்டது. அதன்போது, குறித்த ஊழியர் மீது கவனம் செலுத்தப்பட்டது.

இதேபோன்று ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட கடன் பணம் வங்கியில் வரவு வைக்கப்படாமை தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர். கோப்பாய் பிரதேசத்திலும் இவ்வாறான இரண்டு மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் மாவட்டச் செயலகத்தின் கணக்காய்வுக் குழு பரிசோதனைகளை மேற்கொண்டது. அதில் மோசடிகள் இடம்பெற்றமை உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் விசாரணைகள் இடம்பெற்றன. ஊர்காவற்றுறை மற்றும் தெல்லிப்பழை பகுதியில் மோசடியில் இடம்பெற்ற உத்தியோகத்தர்கள் முதலாவது பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நெடுந்தீவுப் பிரதேசத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற மோசடிகளுடன் தொடர்புடைய இருவர் தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முதன்மை செயலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: