நாளை தொடக்கம் உச்சம்பெறும் காலநிலை சீர்கேடு: வளிமண்டல திணைக்களம்!

Tuesday, May 22nd, 2018

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நாளையுடன் மேலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினமும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்பிரகாரம் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதனுடன் சப்ரகமுவ, மேல், மத்திய, வட மேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், இடி மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

இதேவேளை, களனி, மஹாவலி போன்ற நதிகள் மற்றும் மாஓய நீர்த்தேக்கம் என்பவற்றின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு களனி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக, அந்த கங்கையின் இரண்டு கரைகளிலும் வசிக்கின்ற மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

களு, கிங் மற்றும் அத்தனகலுஓய என்பவற்றின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 7 வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, குருநாகல், கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுல்படுத்தப்படுகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் நெலுவ, தவளம, நாகொட, காலி கடவன்சகர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் களுத்துறையில் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக, தேசிய கட்டிட ஆய்வு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு அச்சுறுத்தல் நிலவும் இடங்களில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும், மண் சரிவுக்கான அறிகுறிகள் உன்னிப்பாக அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலத்தில் வெடிப்பு உருவாகி, ஆழமாகுதல் மற்றும் தரை உள்ளிறக்கங்கள், மரங்கள், மின்கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சாய்வடைதல், சாய்வுகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் தரை மற்றும் சுவர்களில் வெடிப்புகள் உருவாகுதல், நிலத்தில் இருந்து திடீரேன நீரூற்றுகள், சேற்று நீர் வெளியேறுதல் மற்றும் தற்போதுள்ள நீரூற்றுகள் தடைப்படுதல் அல்லது இல்லது போதல் போன்றன, விரைவில் மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: