தேர்தல் தொகுதி நிர்ணயக் குழுவின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது – பிரதியமைச்சர் புஞ்சிநிலமே !

Wednesday, April 11th, 2018

மாகாணசபை தேர்தல் தொகுதி நிர்ணயக் குழு தயாரித்து வழங்கிய அறிக்கையில் திருகோணமலை மாவட்டம் தொடர்பான யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது என பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

அந்த யோசனையை விரிவாக ஆராய்ந்து இனங்களுக்கு இடையில் மோதல்கள், முரண்பாடுகள் ஏற்படாத வகையில் மீண்டும் திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தக் கடிதத்தில் கே.தவலிங்கம் தலைமையிலான மாகாணசபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயக் குழு, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினரான சிங்கள மக்களை கவனத்தில் கொள்ளாது அவர்களை கஸ்டங்களுக்கு உள்ளாக்கும் வகையில் இப்படியான யோசனையை முன்வைக்க எந்த வகையிலும் இடமளிக்க முடியாது.

நெயேல் தித்தவெல்ல எல்லை நிர்ணய குழுவின் யோசனைக்கு அமைய மூதூர் மற்றும் திருகோணமலை என 2 தேர்தல் தொகுதிகள் இருந்தன. 1977 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் மூன்றாவது தொகுதியான சேருவில தொகுதி உருவாக்கப்பட்டது.

இது சிங்கள மக்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்கியது. எனினும் மாகாணசபை தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது 77 ஆம் ஆண்டில் தித்தவெல்ல குழு வழங்கிய யோசனையும் புறந்தள்ளப்பட்டுள்ளது.

கே.தவலிங்கம் தலைமையிலான மாகாணசபை தேர்தல் எல்லை நிர்ணய குழு திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்து கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொண்ட போதிலும் அவர்கள் மக்கள் தொகை மற்றும் தொகுதிகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளனரே தவிர இனங்களின் அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயம் செய்ய தவறியுள்ளனர் எனவும் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: