தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் மிகக் கடுமையாக இருக்கும்!

Wednesday, November 22nd, 2017

தேசியக் கொடி ஏற்றும் விடயத்தில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாணசபை மற்றும் ஏனைய வகைகளிலும் முக்கியமானதாக அமையவிருப்பதனாலேயே சட்டமா அதிபர் ஊடாக இப்பிரச்சினையை அணுகுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்த ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் கூறுகையில்;

வவுனியாவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் வடக்குமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் நாட்டின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்துவிட்டார். இது முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் இந்தச் செயல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன் இது அரசியலமைப்புக்கும் முரணானதாகவுள்ளது. சர்வேஸ்வரனின் இச் செயல் தொடர்பில் என்னிடமும் சில கருத்துக்கள் உள்ளன. ஆனால் நான் நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் நான் சட்டமா அதிபரை சந்திக்கவுள்ளேன். தேசியக் கொடி ஏற்ற மறுத்தமை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த விடயங்கள் வடக்கு மாகாண  அமைச்சர் சர்வேஸ்வரனால் இது தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள், வீடியோ காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களையும் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளேன். இதன் பின்னர் சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கிணங்க தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்விடயம் இத்தோடு முடிந்துவிடப்போவதில்லை என்பதனாலேயே நான் நேரடியாக நடவடிக்கை எடுக்காது சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதனோடிணைந்ததான மேலும் சில சட்ட ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறு எடுக்கும் போது அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு காத்திரமான முகம் கொடுக்கவேண்டும். அதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று நடப்பதே சிறந்த வழி அதுமட்டுமன்றி தேசியக் கொடி ஏற்ற மறுத்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாணசபை மற்றும் ஏனைய வகைகளிலும் மிகவும் முக்கியமான தீர்மானமாக இருக்கும் என்றார்.

Related posts: