தெற்கில் அச்சுறுத்தும் வைரஸ்;  இதுவரை 13 பேர் – 600 பேர் கடும் பாதிப்பு!

Monday, May 21st, 2018

தென்மாகாணத்தில் பரவிவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் சிறுவர்கள். மேலும் 600 இற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் காய்ச்சல் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்தக் குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய பகுதிகளில் பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளது.

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வின் படி தெற்கில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலானது இன்புளுவென்ஸா வைரஸீடன் எடினோ வைரஸ் மற்றும் நியூமோகொக்கல் பக்ரீறியா என்பவற்றின் தாக்கம் காரணமாக ஏற்படும் காய்ச்சல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அது பரவுவதை தடுப்பதற்கான ஆரம்ப கட்டவேலைகள், அறிவுறுத்தல்கள் தெற்கில் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுபிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறிய முடிகின்றது.

Related posts: