டெங்கு, எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவும் ஆபத்து – எச்சரிக்கை!

Thursday, May 31st, 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது வரை நாட்டில் டெங்கு நோயினால் 20083 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை எலிக்காய்சலினால் 1441 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் வெள்ள நீர்த்தேக்கம் காரணமாகவும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் மக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 7,178 பேரும் பெப்ரவரி 4395 பேரும் மார்ச் மாதம் 3313 பேரும் ஏப்ரல் மாதம் 2550 பேரும் மே மாதம் தற்போது வரை 2647 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை மேல் மாகாணத்தில் 6171 பேரும் கிழக்கு மாகாணத்தில் 3335 பேரும் வடமேல் மாகாணத்தில் 2212 பேரும் மத்திய மாகாணத்தில் 1887 பேரும் வட மாகாணத்தில் 1703 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்த பிரதேசங்களில் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தங்களுடைய சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேவேளை மழைநீர் தேங்கியுள்ள பிரதேசம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் நீர்த்தாங்கிகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். இதேவேளை 1 ௲ 5 வரையான குழந்தைகளை கூடிய பாதுகாப்பில் வைத்துக் கொள்வதோடு சுட்டாறிய நீரையே வழங்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

மேலும் எலிக்காய்ச்சலினால் ஜனவரி மாதம் 341 பேரும் பெப்ரவரி மாதம் 193 பேரும் மார்ச் மாதம் 342 பேரும் ஏப்ரல் மாதம் 325 பேரும் மே மாதம் தற்போது வரை 240 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இக்காய்ச்சலினால் களுத்துறை மாவட்டத்தில் 203 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 180 பேரும் மொனராகலையில் 159 பேரும் கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 102 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 100 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தற்போது சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள நீர் தேங்கியுள்ள பிரதேசங்களிலும் விவசாய நிலங்களிலம் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரித்துள்ளனர். ஆகவே வெள்ளநீர் தேங்கியுள்ள வீடுகளை வெள்ளநீரை அகற்றியதன் பின்னரே வீடுகளில் குடியேறுமாறும் விவசாய நிலங்களுக்கு செல்லும் போது பாதணிகளை அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் மே மாதம் வரையில் 45701 பேர் டெங்கு நோயினாலும் 1022 பேர் எலிக்காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இவ் வருடம் இதுவரை 20083 பேர் டெங்கினாலும் 1441 பேர் எலிக்காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனவே கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடம் நோய் பரவும் வீதம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் தீவிரமாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: