சுற்றுலாவிகளின் கொள்வனவு வரி அறவீட்டை நிறுத்தத் தீர்மானம்!

சுற்றுலாப் பயணிகள் நாட்டில் கொள்வனவு செய்யும் பொருள்களுக்கு அறவிடப்படும் வரிப்பணத்தை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சுற்றுலாப் பயணிகள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்குப் பொதுவாக வரி அறவிடப்படுகின்றது. அவ்வாறு அறவிடப்படும் வரிகளை கூட்டிணைத்து அவர்கள் நாட்டை விட்டு செல்லும் போது அதனை திருப்பிக் கொடுக்கும் நடைமுறை வெளிநாடுகளில் இருக்கின்றது. குறிப்பாக சிங்கப்பூரில் இந்த நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்படுகிறது.
சிங்கப்பூரில் பின்பற்றப்பட்டுவரும் இந்த நடைமுறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தத் தேவையான வேலைத்திட்டங்களை தற்போது நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக வரவு – செலவுத் திட்ட பிரேரணையிலும் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் வருடம் மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
தெற்காசிய நாடுகளில் இலங்கையிலேயே எந்தப் பொருளையும் மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம். நாங்கள் பொருள்களை உற்பத்தி செய்யாவிட்டாலும் இந்தியா மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் பார்க்க எமது நாட்டில் பொருள்களின் விலை குறைவு என்றே அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகமான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டில் இருந்து பொருள்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லும் போது அவர்கள் கொள்வனவு செய்த பொருள்களுக்கான பற்றுச்சீட்டை வானூர்தி நிலையத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவற்றில் அறவிடப்பட்டிருக்கும் வரிகளுக்கான பணத்தைத் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறையானது சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும் என்றார்.
Related posts:
|
|