கைச்சாத்தானது ஹம்பாந்தோட்டை உடன்படிக்கை!

Saturday, July 29th, 2017

சர்சைக்குரிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்த நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம், இன்றைய தினம் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்திருந்தார்.இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் இதனை கூறினார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று விவாதம் இடம்பெறுவதாக இருந்தது.

பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்று வாக்களிப்பு நடத்த முற்பட்ட நிலையில் நாடாளுமன்றில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதனையடுத்து, நாடாளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வாக்கெடுப்புக்காக உறுப்பினர்களின் பெயர் வாசிக்கப்பட்டபோது, எதிரணி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.வாக்கெடுப்புக்கு முன்னதாக, கனிய எண்ணெய் தொழிற்சங்க பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், ஆளும்தரப்பு உரிய விளக்கத்தை அளிப்பது அவசியம் என, எதிரணியினர் கூறினர்.நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து, ஆளும்கட்சி உறுப்பினர்களின் வாக்குகளுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒக்டோபர் 4ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த நேற்று சந்தர்ப்பம் இருக்கவில்லை

Related posts: