குற்றவாளிகள் யாரானாலும் கைது செய்யுங்கள் – பிரதமர்!

Sunday, August 13th, 2017

பாரிய ஊழல், மோசடிகள், கொலைகள் போன்ற பாரதூரமான குற்றச் செயல்கள் சம்பந்தமாக வழக்குகளை துரிதப்படுத்தி, அவற்றுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளில் போது தடையேற்படுத்துவோர் யாராக இருந்தாலும் அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் நடத்தப்பட உள்ள மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு சாதகமற்ற நிலைமை உருவாகியுள்ளது. வாக்குறுதி வழங்கியபடி ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஊழல்வாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் தண்டனை வழங்கும் என்ற கடும் நம்பிக்கை மக்களுக்கு இருந்தாகவும் அது தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் தொகுதி அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல்,மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரமாக இருப்பதால், மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அதிருப்தி நிலவுவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகியமையானது அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய நிலைமை ஏற்படுத்தியுள்ளது.இதனால், இந்த நிலைமையை அதே நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கத்திற்கு நெருக்கமான அரசியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சகல விடயங்கள் சம்பந்தமாகவும் பிரதமர் , குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கத்தின் பிரதானிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts: