கல்விப் பணிப்பாளர்களுக்கான விண்ணப்பங்கோரலை நிறுத்தவும் – யாழ். மேல்நீதிமன்று மனு!

Saturday, May 26th, 2018

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கு வடக்கு மாகாண தலைமைச் செயலாளரால் விடுக்கப்பட்ட விண்ணப்பங் கோரலை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் உறுதி கேள் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்ட மேல்நீதிமன்றம், எதிர் மனுதாரர்களுக்கு அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது. மனுதாரரால் கோரப்பட்ட நிவாரணங்களில் ஒன்றான இடைக்காலத் தடைக் கட்டளை எதிர்வரும் 30 ஆம் திகதி வழங்கப்படும் என்று கூறி மனுவை ஒத்திவைத்தது. விண்ணப்பத்தில், பதில் அல்லது நிரந்தர கல்விப் பணிப்பாளராக தற்போது கடமையாற்றும் கல்வி வலயத்தில் 3 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்த நிபந்தனை சேவைப் பிரமாணக் குறிப்புக்கு முரணானதெனக் குறிப்பிட்டு தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் இளங்கோ, மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எதிர் மனுதாரர்களாக முறையே வடக்கு மாகாண தலைமைச் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலையும் அதனை மேற்கொண்டு செயற்படுத்துவதையும் இடைநிறுத்தி வைக்கும் இடைக்காலத் தடைக்கட்டளை வழங்க வேண்டும்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கோரலை விடுத்த முதலாவது எதிர்மனுதாரர் அவரது பொதுக் கடமையை மீறிய இந்த சட்டவிரோத விண்ணப்பங்கோரலை வெற்றும் வறிதானதுமாக உறுதிகேள் எழுத்தாணை கட்டளையை வழங்கவேண்டும்.

வழக்குச் செலவு மற்றும் மன்றால் நியாயமானது எனக் கருதும் பிற நிவாரணங்களும் வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

Related posts: