கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தமிழக கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
Friday, February 23rd, 2018
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப் படகில் செல்ல தமிழக கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து இயந்திரம் பொருத்திய படகுகளில் செல்வதற்கு அனுமதி வழங்க கோரி ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடம் கடற்றொழிலாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை இன்று வரை ஒத்திவைத்தனர்.
அத்துடன், கடற்றொழில் படகுகளில் கச்சத்தீவுக்கு செல்ல சட்டத்தில் அனுமதிக்கவில்லை என்றும், படகில் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் விபத்து இழப்பீடு வழங்க இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு குறுகிய நாட்களே உள்ளநிலையில், இந்த ஆண்டு இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகில் செல்வதற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
எனினும், 2019ஆம் ஆண்டு முதல் நாட்டுப்படகில் கச்சத்தீவுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றும் நாளை மறுதினமும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கிலான இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|