ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இன் பரீட்சை நிறுத்தம்!

Sunday, December 3rd, 2017

இலங்கை கணக்காளர் சேவை தரம் 3 இற்கான பரீட்சை முடிவுகள் வெளியாகும் நிலையில் பரீட்சையை இரத்துச் செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமையால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சார்த்திகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;

இலங்கை கணக்காளர்சேவை தரம் 3 இற்கான ஆட்சேர்ப்பு பரீட்சைகள் நடத்துவதற்கான வர்த்தமானி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 198 பேரை உள்வாங்குவதாக அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 22,23,29 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகள் நடைபெற்றன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 500 க்கு அதிகமான பேர் இதற்கு தோற்றியிருந்தோம்.

பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற்றமையால் மிகுந்த சிரமப்பட்டு படித்து பரீட்சைக்கு தயாராகி இருந்தோம். பரீட்சை முடிவுக்காக காத்திருக்கும் இந்த நிலையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய கல்வி அமைச்சர் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையின் ஒரு பாடத்தையும் இலங்கை கணக்காளர் சேவையின் அனைத்துப் பாடங்களையும் இடைநிறுத்தப் போவதாக தெரிவித்தார்.

இதனால் நாம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். கணக்காளராக தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை இதனால் வீண்போயுள்ளது. காரணங்கள் குறிப்பிடாமல் இதனை நிறுத்துவதால் எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக உரியவர்கள் முழுமையான பதிலைத் தர வேண்டும். என்றனர்.

Related posts: