உயர்தரத்துக்குத் தெரிவானோர் சிறந்த பாடங்களையே தெரிவு செய்யவேண்டும்  – உடற்கல்வி சங்கத் தலைவர் !

Thursday, April 5th, 2018

ஜி.சி.ஈ.சாதாரண தரத்தில் சித்திபெற்ற மாணவர்கள் ஜி.சி.ஈ. உயர்தரத்தில் சிறந்த பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது தான் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்.

உயர்தரத்துக்குத் தெரிவான மாணவர்களின் சிறந்த பாடத்தெரிவு தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது –

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உயர்தர பிரிவுக்கு சிறந்த பாடங்களைத் தெரிவுசெய்ய வேண்டும். அதற்குப் பாடசாலைச் சமூகமும் பெற்றோரும் கல்விப்புலம் சார்ந்தவர்களும் முன்வரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடம் கற்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. உயர்தரத்தில் சித்திபெறுகின்ற வீதமும் குறைந்து வருகின்றது.

இதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணித, விஞ்ஞான பிரிவுக்குத் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. கல்வியியற் கல்லூரிகளிலும் கணித, விஞ்ஞான பாடத்துக்குத் தெரிவாவோரும் மிகக் குறைவாக உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் வெளிநாடுகளிலிருந்துதான் ஆசிரியர்களை அழைக்க வேண்டி வரும்.

இதனை கருத்தில்கொண்டு தகுதியும் – திறமையும் கொண்ட மாணவர்களை உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடத்தை தெரிவு செய்ய ஊக்கமளிக்க வேண்டும். பல பாடசாலைகளில் இரண்டு, மூன்று மாணவர்களே கல்வி கற்கும் நிலை புள்ளிவிவர ரீதியாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மாணவர்களுக்குக் கணித, விஞ்ஞான பாடங்களில் பயப்பீதியை ஏற்படுத்தாது மாணவர்களின் நன்மை கருதியும் வடக்கு மாகாணத்தின் எதிர்கால கல்வியின் நிலை கருதியும் விழிப்புணர்வை சம்பந்தப்பட்டவர்கள் வழங்கவேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்காலத்தில் விஞ்ஞானம் கற்கும் மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி ஊக்குவிப்பை மாணவர்களுக்கு வழங்க கல்விக் கொள்கைகளில் மாற்றம் பெற வேண்டும் என்பதுடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சும் பிரத்தியேகமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

Related posts: