அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கும்படி புத்தபிரான் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு !

Wednesday, May 3rd, 2017

அத்துமீறி மற்றொருவரின் காணியில் விகாரை அமைக்குமாறு புத்த பெருமான் ஒரு போதும் கூறவில்லை என்று தீகவாபி சைத்திய ரஜமகா விகாரையின் முதன்மைப் பிக்கு போத்திவெல சந்தானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியில் புத்தர் சிலை நிறுவும் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவித்ததாவது

மாயக்கல்லியில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்கிறார்கள் பூர்வீகக் காணிகளில் இருந்த அவர்களைச் சுய விருப்பமின்றி அகற்றி விகாரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. மாணிக்கமடுவுக்கு அருகிலேயே தீகவாபி உள்ளதால் இங்கு மற்றொரு விகாரை அவசியமில்லை. தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் பொறுப்பு எல்லா இனங்களையும் சார்ந்தது.

இதனை ஒரு குறிப்பிட்ட குழுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மாணிக்கமடு மாயக்கல்லி விடயத்தினால் அம்பாறை மாவட்டதிலுள்ள கணிசமான சிங்கள மக்கள் கவலையடைந்துள்ளனர் என்றார்

பௌத்த மக்கள், தமிழ், முஸ்லிம் மக்களுடன் என்றுமே நல்லுறவைப் பேணி வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டு மக்கள் எமது சகோதரர்கள். தீகவாபியைச் சுற்றிலும் பல விகாரைகள் உள்ளன. ஆனர் புத்த பெருமானை வணங்குபவர்கள் மிகக் குறைவானவர்களே. அப்படியிருக்கும் போது மற்றுமொரு விகாரை மாணிக்கமடுவில் எதற்கு? மகிந்த சிந்தனைக்குட்பட்ட பௌத்த பிக்குகளின் எதேச்சதிகாரப் போக்கே இது.

இனங்களிடையே முறுகல் நிலையைத் தோற்றுவிக்க எடுக்கப்படும் செயற்பாடுகளே இவை. அத்துடன் எமது மாவட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாம் இருக்கின்றோம். ஞானசார தேரர் இங்கு வரவேண்டிய அவசியமில்லை. இதனைப் பார்க்க அவர் யார்? அவர் இனங்களைத் தூண்டிவிடும் ஒரு குழப்பகாரர். ஏனைய இனங்கள் மத்தியில் வாழும் கணிசமான பௌத்தர்கள் இவரது கொள்கையை ஆதரிக்கவில்லை.

இந்த நாடு பெளத்தர்களுக்கே சொந்தமென சிலர் கூறுகின்றனர். புத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு வந்த மகிந்த தேரர் கூட தேவ நம்பிய திஸ்ஸ மன்னனிடம் இந்த நாடு எல்லா உயிர்களுக்கும் சொந்தம். உமக்கு மாத்திரமல்ல. இந்த நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பே உமக்குரியது. என்றார். இதனை பௌத்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார் சந்தானந்த தேரர்.

Related posts: