உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் வெற்றிகொள்வோம் – தோழர் ரங்கன்!

மக்களின் விருப்பத்தோடும் ஆதரவோடும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் நிச்சயம் நாம் வெற்றிகொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தியபின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
1998 ஆம் ஆண்டுகளில் யாழ். குடாநாடு யுத்த அழிவுகளால் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டு கிடந்த காலப்பகுதியில் நாம் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு 10 சபைகளை வெற்றிகொண்டதன் பயனாக யாழ்ப்பாண மக்களுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையின்கீழ் அவரது வழிகாட்டலுடன் உட்கட்டுமாணம் உள்ளிட்ட பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்திக் கொடுத்து ஒரு பொற்காலத்தை உருவாக்கிக்கொடுத்திருந்தோம்.
அதேபோல 2010 ஆம் ஆண்டு யாழ் மாநகர சபையை நாம் வெற்றிகண்டதன் மூலம் யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகளையும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளையும் மேற்கொண்டு நகர்ப்பகுதியை செழுமைப்படுத்திக் காட்டியிருந்தோம்.
இன்று மக்களிடம் ஒரு மாற்றம் உருவாகியுள்ளது. இதன்மூலம் மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்குவதற்கு வழிவகுப்பார்கள் என நம்புகின்றோம். அதனடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் விரைவாக நடைபெறவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளோம்.
அந்தவகையில் தற்போது சாவகச்சேரி நகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நாம் எதிர்கொண்டு நிச்சயம் வெற்றிகொள்வோம். இதனூடாக வரவுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களையும் வென்றெடுத்து எமது மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளையும் தேவைப்பாடுகளையும் நிச்சயமாக பெற்றுக்கொடுப்போம் என்றார்.
முன்பதாக உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தலைமையிலான கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|