பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016

பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 23/2 வினா நேரத்தின்போது குறித்த பகுதி மக்களது குடிநீர் விடயம் தொடர்பாக பல கோரிக்கைகளை முன்வைத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் இவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தனது உரையில் –

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினைகிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசமானது 448.75 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும்.இங்கு 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் மொத்தம் 7,310 குடும்பங்களைச் சேர்ந்த 25,742 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில்களாக கடற்றொழிலும், விவசாயமும், கால்நடைகள் வளர்ப்பும் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்மக்கள் யாவரும் இடம்பெயர்ந்து நிர்க்கதியாகி மீண்டும் மீளக்குடியமர்ந்து பல அத்தியாவசிய தேவைகள் போதியளவு பூர்த்தி செய்யப்படாத நிலையில் வசித்து வருகின்றார்கள்.

இம்மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினையாகும். இப்பிரதேசத்திற்குள் முற்றுமுழுவதுமாக நீர் விநியோகம் செய்யக்கூடிய நீர் நிலைகள் காணப்படாமை,

தற்போது இருக்கும் கிணறுகளில், குளங்களில் கோடை காலங்களில் நீர் எடுக்க முடியாத நிலை, தொடர்ந்து நீர் எடுப்பதால் நீரின் தன்மை மாறுபடல் போன்ற காரணங்களால் இக் குடிநீர் பிரச்சினையை போதியளவு தீர்க்க முடியாதுள்ளது.

இங்குள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் 09 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு மாத்திரமே பூநகரி பிரதேச சபையினால் நீர் விநியோகம் நடைபெற்று வருவதாகத் தெரிய வருகிறது.இந்நீர் விநியோகமானது பூநகரி பிரதேச சபைக்குரிய நான்கு ரக்டர் பௌசர் மற்றும் குறைந்தளவு ஆளணியையும் கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

இதனால் மேற்படி 09 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை போதியளவு பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும், ஏனைய 10 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் தேவைக்கான குடிநீர் போதிய அளவு இல்லை எனவும் தெரியவருகிறது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இப் பிரதேச சபைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த 6000 லீற்றர் கொள்ளவுடைய பௌசர் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரியவருகிறது.(மேற்படி 09 கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் நீர் தொடர்பான விபரப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

இந்த நிலையில், பூநகரி பகுதிக்கு நிரந்தரமாக நீர் வழங்கக்கூடியதான இரு திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன.ஒன்று – பூநகரிக் குள அபிவிருத்தித் திட்டத்தின் மூலமான நீரைப் பெற்றுக் கொள்வது. இதன் ஊடாக நிலத்தடி நீரை நன்னீராக மாற்றுவதன் ஊடாக குடி நீரையும், விவசாயம், கால்நடைகளை அபிவிருத்தி செய்வதற்கான நீரையும் வழங்குவது. இது நீண்ட காலத் திட்டமாகும்.

இரண்டாவது – இரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையில் குழாய் மூலம் இப்பகுதி மக்களின் குடி நீர்ப் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண முடியும். இது இடைக் காலத் திட்டமாகும்.

எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கமைவாக நான் இவ்விரு திட்டங்களையும் வலியுறுத்தி வருகின்றேன.;இத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் வரை இப்பகுதி மக்களின் குடி நீர்த் தேவையை முன்னிறுத்தி தற்காலிக, உடனடி ஏற்பாடுகள் அவசியமாகின்றன.

மேற்படி கிராமங்களுக்கு போதியளவு குடி நீரை வழங்க 12,500 லீற்றர் கொள்ளளவு உடைய லொறி பௌசர்கள் இரண்டையும், 3,500 லீற்றர்கள் கொண்ட ரக்டருக்குரிய பௌசர்கள் இரண்டையும் பூநகரி பிரதேச சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா?

மேலும் 1000 லீற்றர் கொள்ளவு கொண்ட 10 தண்ணீர் தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா?கடந்த ஆறு மாதங்களில் நீர்விநியோகத்திற்கான எரிபொருள் செலவினமாக மாத்திரம் ஏறக்குறைய நான்கு இலட்சம் ரூபா பூநகரி பிரதேச சபையால் செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இப் பகுதியானது நீண்ட கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் இடம்பெயர்ந்து,

முற்று முழுதாக மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதி என்பதால் மேற்படி பிரதேச சபைக்கான வருமானங்கள் போதியளவு அற்ற நிலையே காணப்படுகின்றது.பூநகரி பிரதேச சபையினால் செலவிடப்பட்டுள்ள மேற்படி எரிபொருள் செலவுகளை பிரதேச சபைக்கு மீள செலுத்துவதற்கான சாத்தியங்கள் ஏதும் உள்ளனவா?

எதிர்வரும் காலங்களில் தற்காலிக ஏற்பாடாக தொடர்ந்தும் தடையின்றி இதற்கு ஏதேனும் நிதி உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா?அத்துடன், முழங்காவில், நாச்சிகுடா, கரியாலை, நாகப்படுவான் ஆகிய கிராம மக்களுக்கு குடி நீர் வழங்கும் நோக்கத்தில்

முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டமும், ஜெயபுரம் மற்றும் வலைப்பாடு ஆகிய கிராம மக்களுக்கு குடி நீரை வழங்கும் நோக்கத்தில் கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டமும் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்டு, முன்னெடுக்கப்பட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள்.முழங்காவில் நிலத்தடி நீர்த் திட்டம் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியுமா?

ஜெயபுரம், வலைப்பாடு கிராமிய நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம் என்பன எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது பற்றி குறிப்பிட முடியுமா?எனது இக் கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இணைப்பு 01

தற்போது நீர்வழங்கப்படும் 09 கிராம சேவையாளர் பிரிவுகள் விபரம்

கி. சே. பிரிவு இடம் 1000L கொள்ளளவு

KN/61 கொல்லன்குறிச்சி 02 தாங்கிகள்
KN/62 செட்டியாகுறிச்சி 04 தாங்கிகள்
கறுக்காய்த்தீவு 07 தாங்கிகள்
KN/63 ஞானிமடம் 05 தாங்கிகள்
KN/65 பள்ளிக்குடா 01 தாங்கி
KN/66 மட்டுவில்நாடு மேடு 03 தாங்கிகள்
KN/67 பரமன்கிராய் 02 தாங்கிகள்
KN/74 நாச்சிக்குடா 03 தாங்கிகள்
ஜெயபுரம் 03 தாங்கிகள்
ஜெயபுரம் சந்தை 03 தாங்கிகள்
19 ஆம் கட்டை 02 தாங்கிகள்
KN/76 பொன்னாவெளி 18 தாங்கிகள்
பாலாவி 01 தாங்கி
KN/72 பல்லவராஜன்கட்டு 01 தாங்கி
ஜெயபுரம்; கிழக்கு 02 தாங்கிகள்

(இதில் பாலாவிக்கு மாத்திரம் 4,000 லீற்றர் கொள்ளளவுள்ள தண்ணீர்த்தாங்கி. ஏனையவை 1,000 லீற்றர் கொள்ளளவு கொண்டவை.)

Related posts:

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நா...
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?...

மும்மொழி அமுலாக்கத்தை உறுதிசெய்வதற்கு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
மானிய அடிப்படையில் விதை உருளைக் கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....