10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் வடக்கு – கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளது விகிதாசாரம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?  – பிரதமரிடம்  டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, May 20th, 2016

சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக எமது வடபகுதி இருப்பதால், இளம் வயதினர் சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இலகுவாக  ஈர்க்கப்படக் கூடிய சூழ்நிலைகளும் காணப்படுகின்றது. குறிப்பாக வன்முறைகளைத் தூண்டக்கூடிய திரைப்படங்கள், புதிய தகவல் தொழில்நுட்பங்களினூடான பாவனைகள் மற்றும் அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனைகள் எமது இளைஞர்களுக்கு சமூகச் சீர்கேடுகளுக்கான உந்துசக்திகளாக அமைகின்றன. இத்தகைய அனைத்து விதமான செயற்பாடுகளிலும் இந்த இளம் வயதினர் ஈடுபடுவதற்கு தொழிலின்மைப் பிரச்சினையும் பிரதான காரணமாக விளங்குகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (20) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 23/2 மூலம் எழுப்பப்படும் வினாக்கள்  ஊடாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  விடுத்த வேண்டுகையின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் பிரதமரிடம் நிலையியற் கட்டளை 23/2 எழுப்பப்படும் வினாக்கள்  மூலம் மேலும் கோரியிருப்பதாவது –

நிலையியற் கட்டளை 23/2 எழுப்பப்படும் வினாக்கள் – 19.05.2016

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கேட்பதற்கு..

அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டில் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் போதைப் பொருள் பாவனை போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வருவதையும் இவற்றில் பெரும்பாலும் இளம் வயதுடையவர்களே ஈடுபட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகின்றேன். இப் பகுதியானது சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற பகுதியாக இருப்பதால் இளம் வயதினர் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் இலகுவாக ஈர்க்கப்படக் கூடிய சூழ்நிலைகளும் காணப்படுகின்றன. குறிப்பாக வன்முறைகளைத் தூண்டக்கூடிய தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் புதிய தகவல் தொழில்நுட்பங்களினூடான பாவனைகள் அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனைகள் என இவை அனைத்தும் சமூகச் சீர்கேடுகளுக்கான உந்துசக்திகளாக அமைகின்றன.

இவை அனைத்துக்கும் இந்த இந்த இளம் வயதினர் உட்படுவதற்கு தொழிலின்மைப் பிரச்சினையும் பிரதான காரணமாகும். இலங்கையின் தொழிலின்மை வீதமானது 2013ம் வருடம் 4.4 வீதமாக இருந்து 2014ம் வருடம் 4.3 ஆகக் குறைந்து 2015ம் வருடம் இது 4.6 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பற்ற நிலையில் இருந்து வருகின்றனர். இவர்களில் பட்டதாரிகள் உட்பட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேறி பல்கலைக்கழகத்திற்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளவர்களும் பல்லாயிரக் கணக்கில் அடங்குகின்றனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தொழிலின்மை பிரச்சினையானது தலைவிரித்தாடும் நிலையே காணப்படுகின்றது.

இந்த நிலையை மாற்றி அமைக்கும் முகமாக இப் பகுதிகளில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் முதலீடுகளை அதிகரித்து இப் பகுதி இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் தங்களது திட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் உட்படக் கூடிய விகிதாசாரம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் செல்ல இயலாது தற்போது தொழில்வாய்ப்புகளின்றி இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய  திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அறியத்தர முடியுமா?

இப் பகுதிகளின் வளங்களைப் பயன்படுத்தி சுய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி அவற்றை வளர்க்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்படக்கூடிய திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி விளக்க முடியுமா?

இப் பகுதிகிளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செயற்பாடுகளை மேலும் செயலூக்கப்படுத்தி அதன் ஊடாக இளைஞர் யுவதிகளின் திறன்களை விருத்தி செய்வதற்கும் அவர்களை சமூகத்தின்பாலான ஆர்வலர்களாக மாற்றுவதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

கடந்த காலத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பெரும்பாலானவர்கள் தொழில் வாய்ப்புகளின்றி தங்களுக்கான வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள இயலாத நிலையில் மிகவும் க~;டப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு கல்வித் தகைமைகள் தொழில் திறமைகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இவர்களுக்கு ஏற்ற வகையில் தொழிற்பயிற்சிகளை வழங்கி சுய தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுத்து அதனை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

இவர்களில் தகைமை மற்றும் திறமை உள்ளவர்களுக்கு அவர்களது தகைமை மற்றும் திறமைகள் அடிப்படையில் அரச சேவைகளில் உள்வாங்கப்படக்கூடிய வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்பது பற்றி அறியத்தர முடியமா?

இவர்களுக்கான வாழ்வாதாரங்கள் தொடர்பில் அரசுக்கு ஏதேனும் மாற்றுத் திட்டங்கள் உள்ளனவா என்பது பற்றி குறிப்பிட முடியுமா?

கடந்த கால யுத்தம் காரணமாக பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் அங்கவீனர்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ள நிலையில் இவர்களது வாழ்வாதாரங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய விஷேட திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கௌரவ பிரதமர் அவர்கள் அறியத் தருவாராக.

டக்ளஸ் தேவானந்தா பா. உ.

செயலாளர் நாயகம் – ஈபிடிபி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்

Related posts:


சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு ஏதேனும் நடவட...
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...
கடற்றொழிலாளர்களுக்கு 55 அடி நீளமான படகுகளை 50 வீத மானிய விலையில் வழங்கப்படுவது தொடர்பில் குழப்ப நில...