வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களே  மேற்படி வறட்சி காரணமாக மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இதன் பிரகாரம், வடக்கு மாகாணத்தில் சுமார் 1 இலட்சத்து 741 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 47 ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமே மிக அதிகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாவட்டம் என்றும,; இங்கு சுமார் 33 ஆயிரத்து 165 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 9 ஆயிரத்து 735 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் சுமார் 32 ஆயிரத்து 426 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 5 ஆயிரத்து 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், குருனாகல், பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

அந்தவகையில் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்கள் தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இதுவரையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?  இதுவரையில் நிவாரணங்கள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளனவா?

அல்லது வழங்கப்பட்டுள்ளன எனில், என்னென்ன நிவாரணங்கள், எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன?

குடி நீர்த் தட்டுப்பாடுகள் நிலவும் பகுதிகளுக்கு, குடிநீர் கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து குடி நீரைக் கொண்டு செல்வதற்கும், குடி நீரை தேக்கி வைப்பதற்கும் வசதியாக பவுசர்கள், நீர்த் தாங்கிகள் போன்றவற்றினை வழங்குவதற்கு தங்களது அமைச்சின் மூலமாக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் மானியங்கள் உள்ளனவா? இல்லை எனில், இதற்கென ஒரு விஷேட திட்டத்தினை ஏற்படுத்த முடியுமா?

வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கடலை அண்டியப் பகுதிகளில் உவர் நீர் உட்புகுந்து கிடைக்கக்கூடிய குறிப்பிட்டளவு நிலத்தடி நீரிலும் உவர்த் தன்மை கலந்திருப்பதால், உவர் நீர்த் தடுப்பணைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பிலான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்;.

Related posts:

எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களு...
கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
யாழ். பல்கலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டு...