வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 25th, 2017

வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன? என அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (25) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அமைச்சின் விவாதத்தின்போது கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயெ குறித்த விடயத்தை டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திழரந்தார்
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திரந்ததாவது –

அண்மைக் காலமாக நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. நாட்டின் தென் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண் சரிவுகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அப்பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீள இயலாத நிலையில் இன்றும் பலர் இருந்து வருகின்றனர். இம் மக்களது இயல்பு வாழ்க்கை குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையிலேயே, மேற்படி வரட்சி காரணமாகவும் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், வடக்கு மாகாணத்சை;; சேர்ந்த 453,195 பேரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 200,451 பேரும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த 178,047 பேரும், வடமத்திய மாகாணத்தைச்; சேர்ந்த 16,800 பேருமாக 8 இலட்சத்து 48 ஆயிரத்து 493 பேர் வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இன்றைய நிலையில் இத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் இல்லாமல் இல்லை.

இதன்படி பார்க்கின்றபோது, வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் வரட்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், வடக்கில், குறிப்பாக தீவகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வரட்சியின் கொடுமை தாங்காது, குடி நீருக்கான வசதிகளற்ற நிலையில் தற்போது இடப் பெயர்வுகளை எதிர்நோக்கி வருகின்ற ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாக வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், இப் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பது தொடர்பில் முன்கூட்டிய நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், எமது மக்களின் தற்போதைய பாதிப்புகள் தொடர்பில் உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் பல்வேறு படிமங்கள் மற்றும் கழிவுகள் காரணமாகவும், உவர் நீர் உட்புகுதல் காரணமாகவும் மாசடைந்துள்ள நிலைமையும் காணப்படுகின்றது. அத்துடன், உள்@ராட்சி நிறுவனங்கள் செயற் திறன்களை இழந்துள்ள நிலையும் காணப்படுகின்றது. எனவே, இவற்றையும் அவதானத்தில் கொண்டே நாம் மேற்படி வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உடனடி ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கென அண்மையில் வடக்கு மாகாணத்திற்குச் சென்றிருந்த கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அங்குள்ள நிலைமைகளை அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் எனவும் நம்புகின்றேன்.

வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?

வடக்கு மாகாணத்தில் தற்போது நீருக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்களின் முன்பாக, தென் பகுதியிலிருந்து குடி நீரை இரயில் மூலமாக ஓர் விஷேட ஏற்பாட்டில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா?

ஏனைய, கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் என்ன?

வடக்கு மாகாணத்தில் மேற்படி இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நிரந்தர ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகள் ஏதேனும் திட்டமிடப்பட்டுள்ளதா? ஆம், எனில் அது குறித்து விளக்க முடியுமா? இல்லையேல், அதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
இலங்கை உயர்கல்வி முறைமை பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...