வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது எப்போது? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Tuesday, July 23rd, 2019

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துடன் தொடர்புடைய ஈஸ்வர ஆலயம் அமையப்பெற்றிருந்ததான வாவெட்டி மலையானது முல்லைத்தீவு மாவட்டத்திலே உயர்ந்த மலையாகக் கருதப்படுகின்றது. இந்த மலையில் 1244ஆம் ஆண்டு முதல் 1811ஆம்  ஆண்டு வரையிலான காலப்பகுதியில்  வன்னியை ஆட்சி செய்திருந்த சிற்றரசர்களால் ஆலயம் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமைக்கான சான்றுகள் தற்போதும் அங்கு காணப்படுவதுடன், மலையின் உச்சியில் ஆலயம் அமைந்திருந்ததற்கான கற்தூண்கள், கொடிபீடம் ஆகியன காணப்படுகின்றன. இந்த மலைப் பகுதியானது தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் அடையாளச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இம்மலைப் பகுதியில் கருங்கற்கள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நாளாந்தம் நூற்றுக் கணக்கான டிப்பர் வாகனங்களால் கற்கள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணமாக தொல்பொருள் இடங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், சில காலத்தில்  முழு மலையும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

அதேநேரம், திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று, முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில், தண்ணீர் முறிப்புக் குளத்திற்கு அருகாமையிலுள்ள குருந்தூர்மலை, நுவரெலியா கந்தப்பளை மாடசாமி கோவில்; மற்றும் வவுனியா வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரன் ஆலயம் போன்ற இடங்களிலும் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பிரச்சினைகள் காரணமாக மத மற்றும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவை மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு, அத்தகைய எந்தவொரு பிரச்சினைக்கும் இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாத நிலையே காணப்படுகின்றது.

எனவே, இத்தகைய பிரச்சினைகள் எமது மக்களுக்கு உணர்வு ரீதியிலான தாக்கங்களையும், வாழ்வாதார மற்றும் வாழ்விடங்களுக்கான கேள்விக்குறியினையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது மிகவும் அத்தியவசியமாக இருக்கின்றது.

எனவே,

01.       நாட்டில் தொல்பொருள் இடங்கள் அடையாளப்படுத்துகின்றபோது, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வரலாற்று ஆய்வாளர்களையும் இணைத்ததாக ஒரு அதிகாரமிக்க  குழுவை உருவாக்க முடியுமா?

02.       மேற்படி குழுவைக் கொண்டு, இதுவரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் இனங்காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற இடங்கள் தொடர்பில் மீள் பரிசீலனைகளைச் செய்ய முடியுமா?

03.       அடையாளங் காணப்படுகின்ற தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கென பலமிக்கதொரு பொறிமுறையை அமைக்க முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 27/2 கேள்வி நேரத்தின் போது வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

எமது மக்கள் ஒருபோதும் அபிவிருத்தியையோ, வாழ்வாதாரத்தையோ எதிர்த்தவர்கள் அல்லர். மக்களைக்காட்டி, மக்களு...
திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்...
 அரிசியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

இரணைமடு - யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்தை முன்னெடுப்பதில் வேறேதும் தடைகள் உள்ளனவா? -  நாடா...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?...
குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு அவற்றின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க மு...