வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளினது வாழ்வியல் மீட்சிக்கு களம் அமைக்கப்பட வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட  யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாற்று வலுவுள்ளவர்களின் எண்ணிக்கை ஏனைய மாவட்டங்களைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் பலர் எந்தவிதமான உதவிகளும் இன்றிய தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள இயலாது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தவகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கென ஒரு விசேட ஏற்பாடாக உதவிபெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்றையதினம்(21) நாடாளுமன்ற விவாத நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் குறித்த கோரிக்கையை முன்வைத்துதள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

கடந்த கால யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மாற்று வலுவுள்ளவர்களின் எண்ணிக்கை ஏனைய மாவட்டங்களைவிட அதிகரித்துக் காணப்படுகின்றதொரு நிலையை தாங்களும் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன். இவர்களில் பலர் எந்தவிதமான உதவிகளும் இன்றிய நிலையில் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக்கொள்ள இயலாது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் மாற்று வலுவுடையவர்களாக 16,213 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4003 பேர் மாத்திரமே அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவைப் பெறுகின்றனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் மாற்று வலுவுள்ளவர்களில் 12,210 பேருக்கு மேற்படி கொடுப்பனவு கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது. (இது தொடர்பான விபரப் பட்டியல் (இணைப்பு 1) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கென ஒரு விசேட ஏற்பாடாக மேற்படி 3000 ரூபா பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா?

அல்லது, இவர்களுக்கென வேறு விசேட திட்டங்களை ஏற்படுத்தி, அதன் ஊடாக உதவக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளனவா? என்பது பற்றி அறியத்தர முடியுமா?

வடக்கு மாகாணத்தில் மாற்று வலுவுள்ளவர்களுக்கான மலசல கூடங்களை அமைப்பதற்கென அண்மையில் வழங்கப்பட்ட  நிதி போதுமானதாக இல்லை என்றும், பலர் இத் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறு மாற்று வலுவுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களின்போது,  அந்தந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வகையிலான நிதி உதவிகளை வழங்குவதற்கும், பலரை அத் திட்டங்களுக்குள் உள் வாங்கக்கூடிய வகையிலும் அத் திட்டங்களை வகுப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

வடக்கில், மாற்று வலுவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மடிக்கணினி பெறுவதில் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் தவணைக் கட்டணம் செலுத்தி மடிக்கணினிகள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இருப்பினும், இந்த தவணைக் கட்டணங்களைக்கூட செலுத்த வசதியில்லாத நிலையில் பலர் காணப்படுகின்றனர்.

இவ்வாறானவர்கள் மடிக்கணினிகளைப் பெற ஏதாவது மாற்று ஏற்பாடுகள் செய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா?

மாற்று வலுவுள்ள மாணவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து மானியமாக 750 ரூபா வழங்கப்பட்டதெனவும், தற்போது ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

இந்த மானியத்தை மீண்டும் வழங்கக்கூடிய சாத்தியங்கள் குறித்து தெளிவுபடுத்த முடியுமா?

யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாற்று வலுவுள்ளவர்களுக்கு சமூக வலுவூட்டல் நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பன  வடக்கு – கிழக்கு மாகாணங்களில் போதியளவில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தங்களது அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்த முடியுமா?

யாழ் மாவட்ட மட்ட முதியோர் பேரவைக் கூட்டத்தை நடத்தக்கூடிய வகையில் கட்டிட வசதிகள் இல்லை என்றும், ஊரெழுவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பின் கிளை அலுவலக வளாகத்தை அதன் நிறைவேற்று உத்தியோகத்தர் வழங்க முன்வந்த நிலையில், இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் கொழும்பு, முதியோர் செயலகத்திலிருந்து இதுவரையில் எவ்விதமான பதிலும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா?

யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் தங்களது சொந்த இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்திருந்த மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முழுமையாக முற்றுப் பெற்றுள்ளதாகவும், ஏனைய மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னும் முழுமைப் பெறவில்லை என்றும் தெரியவருகிறது. இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் நலன்புரி நிலையங்களில் எதுவித வாழ்வாதார வசதிகளுமின்றி வாழ்ந்தவர்களாவர்.

ஏனையவர்கள் நீண்ட கால யுத்தம் காரணமாக பெரிதும் நலிவடைந்த மக்களாவர். இவர்களது நலன்கருதி இவர்களுக்கும் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படக்கூடிய வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், அது போதியளவு சாத்தியமாகாமல் போயிற்று. அந்த வகையில் தற்போது வடக்கில் 96,804  குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் பெறத் தகுதியுள்ளவர்கள் என விண்ணப்பித்துள்ளனர்  எனத் தெரியவருகிறது. (பட்டியல் (இணைப்பு – 2) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) அதே நேரம், ஏற்கனவே சமுர்த்தி பெறுகின்ற குடும்பங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என நாம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தும் அந்த கோரிக்கை போதியளவில் செயற்படுத்தப்படவில்லை.

சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவு கோரி விண்ணப்பித்தவர்களின் தெரிவினை பிரதேச மட்டங்களில் உடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா?

தற்போது வழங்கப்பட்டுவரும் வாழ்வாதார உதவிகளை அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளுக்கு வடக்கு மாகாணத்தில் 100 வீத மானிய அடிப்படையில் வழங்க அவதானம் செலுத்த முடியுமா?

சமுர்த்தி, வாழ்வின் எழுச்சி சமூகப் பாதுகாப்பு நன்மைகளான திருமணக் கொடுப்பனவு, பிறப்பு கொடுப்பனவு, நோயாளர் கொடுப்பனவு, இறப்புக் கொடுப்பனவு ஆகியவற்றை சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்காத வறிய மக்களுக்கும் பெற்றுத்தரக்கூடிய சாத்தியங்கள் உண்டா?

வறிய சமுர்த்தி பயனாளிகளின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு ‘சிப்தொற” என்ற பெயரில் புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. இதன் தமிழ் விளக்கம் “கல்விக் கதவு” என்பதாகும். எனவே இந்த சொற்பதத்தினை தமிழ்மொழி மூல மாணவர்களிடையே கல்விக் கதவு அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதுடன் இந்த புலமைப் பரிசில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா?

சமுர்த்தி, வாழ்வின் எழுச்சி பயனாளிக் குடும்பங்களின் தகுதியான இளைஞர், யுவதிகளுக்கு சமுர்த்தி உத்தியோகஸ்தர் நியமனங்களில் முன்னுரிமை வழங்க முடியுமா?

சமுர்த்தி, வாழ்வின் எழுச்சி வங்கிகள் ஊடாக வறிய நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த தொழில் முயற்சியாளர்கள் இலகு முறையில் விரைவாக கடன்களைப் பெறும் பொறிமுறை ஒன்றை உருவாக்க முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் வடமாகாண சபைக்கு பங்கு ஏதேனும் உண்டா? - நாடாளுமன்ற விவாதத்தில் கேள்...
வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - நாடா...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...