முப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூற முடியுமா? – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 7th, 2016

 

கடந்த அரசு யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும், தமிழ் மக்களின் மனங்களை போதியளவு வெல்லத் தவறிவிட்டது என்பதை உணர்ந்து தற்போதைய அரசு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது.

அந்த வகையில், தமிழ் பேசும் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் பல இன்னும் தீர்க்கப்படாத நிலையில்,

அவற்றையும் இனங்கண்டு, இந்த அரசு படிப்படியாகத் தீர்க்கும் என்று நம்புகின்றேன். குறிப்பாக வேலையில்லாப் பிரச்சினை என்பது வடக்கில் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துக் காணப்படுகின்றது.

பட்டதாரிகள் ஒருபுறம், கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் செல்ல இயலாமல் வேலைவாய்ப்பின்றி இருப்போர் ஒருபுறம், புனர்வாழ்வளிக்கப்பட்டு,

உரிய வேலைவாய்ப்புகள் இன்றி இருப்போர் ஒரு புறம் என இப் பிரச்சினையானது எமது சமூகத்தையும் வாட்டுகின்ற பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.

குறிப்பாக வடக்கின் முக்கிய நகரங்களில் இளைஞர் வேலைவாய்ப்பின்மையானது 60 வீதமாக இருப்பதாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வருடம் ஜனவரி மாதம் 12ம் திகதி, சுவிட்சர்லாந்து. டாவோசில் இடம்பெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில் தாங்கள் உரையாற்றியபோது,

‘இலங்கையில் மோதல் நடைபெற்ற பகுதிகளில் புனர்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் புனர்நிர்மாணத்தை முன்னெடுப்பதே எனது முதல் முன்னுரிமைக்குரிய விடயம்’ எனக் கூறியிருந்தீர்கள்.

இது உண்மையிலேயே மிகவும் போற்றத்தக்க விடயமாகும். எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது இன்றியமையாதது என்பதை நாம் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பியிருந்த ஆரம்பம் தொட்டே வலியுறுத்தி வந்துள்ளோம்.

தேசிய நல்லிணக்கத்தினூடாகவே எமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற அசையாத நம்பிக்கையினை முன்வைத்தே எமது அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும்,

தேசிய நல்லிணக்கத்தை நாம் பலமிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அதற்கு இரு தரப்பு மக்களிடையேயும் உளப்பூர்வமான எண்ணக் கருக்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

அதேவேளை, தமிழ் மக்களை நாம் தயார்படுத்த வேண்டுமெனில், அவர்களை உணர்வுப்பூர்வமாக வென்றெடுக்க வேண்டும்.

இந்த வகையில் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்திற்குப் புறம்பாக உணர்வு ரீதியல் திணிக்கப்பட்டிருக்கும் பல்வேறு எண்ணப்பாடுகளை அகற்றுவதும் இந்த அரசின் முக்கியப் பணியாக அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில் இலங்கை இராணுவமானது இன்னும் எமது மக்களில் பெரும்பாலானவர்களிடையே ‘சிங்கள இராணுவம்’ என்றே கருதப்படக்கூடிய ஒரு நிலைப்பாடு காணப்படுகின்றது என்பதை தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றேன்.

இதனையும் அடிப்படையாகக் கொண்டே நாங்கள் இன்னமும் அடிமைப்படுத்தப்பட்டதொரு சமூகமாகவே வாழ்வதாக எமது மக்களிடையே உணர்வுகள் காணப்படுகின்றன.

இவை, ‘நாம் இலங்கையர்கள்’; என்ற உணர்வை தமிழ் மக்களிடமிருந்து அகற்றியுள்ளதாகவே தெரியவருகிறது. இலங்கை மக்கள் அனைவரது உள்ளங்களிலும்

‘நாம் இலங்கையர்கள்’ என்ற உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். எனவே, இவ்வாறான நிலையை தமிழ் மக்களிடையே மாற்றும் வகையிலும், தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு என்ற வகையிலும்,

முப்படைகளிலும் விகிதாசார அடிப்படையில் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளை பதவிகளில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூற முடியுமா?

பொலிஸ் திணைக்களம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடாக மேலும் வேலை வாய்ப்புகளை தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு வழங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

அவ்வாறான சாத்தியப்பாடுகள் இருப்பின், அவ்வாறு இணைத்துக் கொள்பவர்களை வடக்கு – கிழக்கு உட்பட்ட தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் கடமைகளில் அமர்த்த முடியுமா என்பது பற்றி அறியத்தர முடியுமா?

மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களையும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

epdpnewsepdpnewsepdpnewsepdpnewsepdpnewshqdefaultdddddddddddd_14897_15147_15178_16285_16590_18228-300x225

Related posts:

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...
புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் ...