மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, February 7th, 2017

நெடுந்தீவு, பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண சபையின் கீழ் இயக்கப்பெற்றாலும், மேற்படி தேவைகளை மாகாண சபை மேற்கொள்ளத் தவறியுள்ளதால், வடக்கு மாகாண சபைக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் மத்திய சுகாதார அமைச்சு செயற்பட்டு, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கையை விரைவாக எடுத்து உதவ வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா சுகாதார, போசணை மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர், மருத்துவ கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்களிடம் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் நகரிலிருந்து சுமார் 36 கிலோ மீற்றர் தரை மற்றும் 8 கடல் மைல் (11 கிலோ மீற்றர்)  தூரத்தில் அமைந்துள்ள நெடுந்தீவில் தற்போது சுமார் 1,390 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 4,559 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைத் தவிர, ஏனைய தொழிற்துறைகள் சார்ந்தும், சுற்றுலாப் பயணிகளாகவும் வருகை தருவோர் பலரும் அன்றாடம் தங்கிப்போகும் இடமாகவும் இது காணப்படுகின்றது. இந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட இத்தீவில் மருத்துவத் தேவையை ஈடுசெய்யும் வகையில் ஒரேயொரு வைத்தியசாலையே அமையப்பெற்றுள்ளது. பிரதேச வைத்திய சாலையாக உள்ள மேற்படி வைத்தியசாலை தற்போது மிகவும் தரம் குறைந்த நிலையிலேயே காணப்படுவதாகத்  தெரிய வருகின்றது.

நெடுந்தீவு, யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மிகுந்த தொலைவில் நீண்டதூர தரை மற்றும் கடல் வழிப் போக்குவரத்து கொண்ட தனித்த தீவாக இருப்பதால், இங்குள்ள மேற்படி வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியதுடன், விN~ட தேவைகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிய வருகிறது.

அந்த வகையில் கடந்த சுமார் 70 வருடங்களுக்கு முன்பதாக அமைக்கப்பட்ட மகப்பேற்று விடுதி, ஆண் நோயாளர்கள் விடுதி, பெண் நோயாளர்கள் விடுதி உள்ளிட்ட கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாலும், போதிய விடுதி வசதிகள் இன்மை காரணமாகவும் நோயாளிகளை தங்க வைத்துப் பராமரிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் போன்றவர்களுக்கான அறைகள், மலசலகூட வசதிகள் என்பன இன்மை காரணமாக இவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதாகவும்,  தற்போது மேற்படி வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ உபகரணத் தொகுதிகள், குருதிப் பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதி, பிணவறை வசதி, மருந்தக வசதி, ஆய்வுகூட வசதி, விசர் நாய்க் கடிக்கான தடுப்பூசி மருந்துகள், தொற்று நோய்களுக்கான மருந்துகள் போன்ற வசதிகள் மற்றும் குடி நீர் வசதிகள் என்பன செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது. நிரந்தர, சுத்தமான  குடி நீர் வசதிகள் தற்போது நெடுந்தீவில் எம்மால் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், குழாய் மூலமாக இதனைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.

அத்துடன், இரண்டு வைத்தியர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது ஒரு வைத்தியர் மாத்திரமே பணியாற்றி வருவதாகவும், இரண்டு தாதிய உத்தியோகஸ்தர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது ஒரு தாதிய உத்தியோகஸ்தர் மாத்திரம் – அதுவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மேற்படித் தேவைகள் வடக்கு மாகாண சபையின் மூலமாக இதுவரையில் பூர்த்தி செய்யப்படாதுள்ளமையால், மத்திய அரசின் சுகாதார அமைச்சு தலையிட்டு, வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருந்து மேற்படித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்மை குறிப்பிடத்தக்கது.

10.-1-300x229

Related posts:

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிணக்கத்தை நோக்கியதான பயணத்தை சீர...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!