புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, June 7th, 2019

நாட்டில் ஏற்கனவே சுமார் 14 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருக்கின்ற நிலையில், மேலும் 6 இலட்சம் பேருக்கு புதிதாக சமுர்த்தி உரித்துப் பத்திரம் வழங்குகின்ற நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு வருவதை அவாதானிக் முடிகின்றது.

ஏற்கனவே சமுர்த்தித் திட்டம் மூலமாகப் பயன்களைப் பெறுகின்றவர்கள் அங்கத்துவ மற்றும் உரித்துப் பத்திரங்களைப் பூர்த்தி செய்தும், அந்த ஆவணங்கள் பிரதேச செயலக மட்டத்தில் பேணப்பட்டும், பயனாளிகளாவோர் சிறு குழுவில் இணைந்தும், சமுர்த்தி வங்கியில் கணக்குகளை ஆரம்பித்தும், சேமிப்புகளை மேற்கொண்டுமே சமுர்த்திப் பயனாளிகளாக உள்வாங்கபட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இவ்வாறு சமுர்த்திப் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டவரது குடும்பம் சார்ந்து பிறப்பு, திருமணம், நோய்வாய்ப்படல், இறப்பு போன்ற சம்பவங்களின்போது, சமூக நன்மைகள் அக் குடும்பங்களுக்குக் கிடைத்து வருகின்றன.

இத்தகைய நிலையில், தற்போது வழங்கப்பட்டு வருகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் என்பது எமது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையே தோற்றுவித்திருக்கின்றது. இது ஏதோவொரு ஏமாற்று ஏற்பாடோ? என்ற சந்தேகம் எமது மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன:-

தற்போது புதிதாக வழங்கப்படுகின்ற சமுர்த்தி உரித்துப் பத்திரம் மூலமான திட்டம் நிலையானதா? எந்த வகையில்?
ஏற்கனவே சமுர்த்திப் பயனாளிகளாக இருக்கின்றவர்களைச் சமுர்த்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டபோது, கடைப்பிடிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் புதிதாக தற்போது இணைத்துக் கொண்டுள்ளவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளனவா? எந்த வகையில்?

சமுர்த்திப் பயனாளிகாளகத் தற்போது இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலப் பங்களிப்பைச் செலுத்திய பின்னரே சமூகப் பாதுகாப்பு நன்மைகளைப் பெறலாம். ஆனால் புதிய பயனாளிகள் எந்த வகையில் பெற்றுக் கொள்வார்கள்?

ஏற்கனவே சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்குக் கல்விக் கொடுப்பனவு என்ற வகையில் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் உயர்தரம் கற்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் 1,500 ரூபா வீதமாக (‘சிப்தொர’) புலமைப் பரிசில் திட்டம் நேர்முகத் தெரிவுக்கூடாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த முறை இனியும் தொடருமா? அல்லது எல்லோருக்கும் வழங்கப்படுமா

ஏற்கனவே சமுர்த்திப் பயனாளிகளாக இருப்பவர்களில் ஒரு பகுதியினரை இரத்துச் செய்துவிட்டு புதிய தெரிவுகளைச் சேர்த்துக் கொள்கின்றீர்களா? அல்லது ஏற்கனவே இருப்பவர்களுக்கு மேலதிகமாக இவ் 600,000 பயனாளிகளை இணைத்துக்கொள்கின்றீர்களா?

மேற்படி புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளுக்குரிய நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகின்றது? தற்போதைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை எவ்வளவு பேர் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டங்களின் தேவையைப் பூரணமாகப் பூர்த்தி செய்ய முடியுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் தயா கமகே அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.


பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...
யாழ்.பல்கலையின் நிலை குறித்து நாடாளுமன்றில் குரல் கொடுத்த எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன...
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...