பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் வடமாகாண சபைக்கு பங்கு ஏதேனும் உண்டா? – நாடாளுமன்ற விவாதத்தில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 17th, 2016

பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது, தனியே அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காலம் காலமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரமாகவும் உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களிடம் பாராளுமன்ற வினாக்கள் (23/2 )நேரத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாd முழுமையான விபரத்தை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

பாராளுமன்ற வினாக்கள் 23/2

கௌரவ டக்ளஸ் தேவானந்தா பா.உ.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களை

கேட்பதற்கு.

யாழ்ப்பாண வானூர்தி நிலையம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி என்னும் இடத்திலுள்ள படைத்துறை வானூர்தித் தளமும் உள்ளூர் வானூர்தி நிலையமும் ஒன்றாகக் கலந்திருப்பது யாவரும் அறிந்த விடயம்.

யாழ்ப்பாண நகரிலிருந்து 16 கிலோமீற்றர் வடக்கே இந்த வானூர்தித் தளம் அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படையின் பயன்பாட்டுக்காக இந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இலங்கை வான்படை இதனைக் கையகப்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான் படை இலங்கையின் காங்கேசன்துறைக்கு அருகில் பலாலியில் வான்வெளிக்களம் ஒன்றை அமைத்தது. போரின் போது இத்தளத்தில் பிரித்தானியாவின் வான்படையணிகளும் வான்-கடல் மீட்பு அணிகளும் இங்கு நிலை கொண்டிருந்தன. போரின் முடிவை அடுத்து இவ்வான்வெளிக்களம் பிரித்தானியரால் கைவிடப்பட்டதை அடுத்து, இலங்கையின் குடிமை வான்போக்குவரத்துத் திணைக்களம் இதனைக் கையேற்றது.

ஏர் சிலோன் நிறுவனத்தின் முதலாவது பயணம் 1947 டிசம்பர் 10 இல் இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து பலாலி வழியாக சென்னைக்கு நடத்தப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இவ்வானூர்தி நிலையத்தூடாக தென்னிந்திய நகரங்களுக்கும், கொழும்புக்கும் சேவைகள் இடம்பெற்றன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம்; ஆரம்பித்ததை அடுத்து பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

1976 ஆம் ஆண்டில் இலங்கை வான்படையின் பிரிவு ஒன்று பலாலியில்  நிறுவப்பட்டது. 1982 சனவரி முதல் இப்படைப்பிரிவின் வான்வெளிக்களமாகப் பலாலி விமான நிலையம்  பயன்படுத்தப்பட்டு வந்தது.

01 பயணிகள் விமான நிலையமாக இருந்த பலாலி விமான நிலையம் என்ன அடிப்படையில் விமானப்படையினருக்கு கையளிக்கப்பட்டது?

பலாலி வானூர்தி நிலையம் உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற ஆயுதப் படையினரால் பயன்படுத்தப்பட்ட அதேவேளை, பொதுமக்களுடைய அவசர தேவைகளுக்கும் காலத்திற்குக் காலம் பயன்படுத்தப்பட்டது. 1990களின் ஆரம்பத்தில் பலாலி வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கு குடியிருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

02) பலாலி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்துவந்த எத்தனை குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன? இடம்பெயர்ந்த குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்? பொதுமக்களுக்கு சொந்தமான எத்தனை வீடுகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டன? மொத்தமாக எத்தனை ஏக்கர் காணி படையினரால் கையகப்படுத்தப்பட்டது? இவை யாவும் என்ன அடிப்படையில் இடம்பெற்றன? கையகப்படுத்தப்பட்ட காணிகள், வீடுகள் ஆகியவற்றிற்கு மாற்றுக் காணிகள், வீடுகள், குடியிருப்புக்கள் ஆகியன அரசினால் வழங்கப்பட்டனவா? அவை தொடர்பான விபரங்கள் எவை?

1990 முதல் 1995 வரை வலிகாமம் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் இந்த உயர் பாதுகாப்பு வலயமும் ஒன்றாகும்.

1995இல் வலிகாமம் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பயணிகள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. 1996இல் லயன் ஏர் தனியார் விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு விமானப் போக்குவரத்து சேவையை ஆரம்பித்தது.

1998 மார்ச் மாதத்தில் மொனாரா ஏர்லைன்ஸ் தனியார் விமான நிறுவனம் தனது சேவையை ஆரம்பித்தது. இச்சேவை இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி புலிகள் அச்சுறுத்தியதை அடுத்து இச்சேவை 1998 செப்டம்பர் 16இல் நிறுத்தப்பட்டது.

1998 செப்டம்பர் 29ஆம் திகதி இரத்மலானையை நோக்கி பகல் 1.48 மணிக்குப் புறப்பட்ட பயணிகள் வானூர்தி லயன் ஏர் விமானம் 2.10 மணியளவில் காணாமல் போனது. மன்னாருக்கு 15 கிலோமீற்றர் வடக்கே இரணைமடு என்ற இடத்தில் இது கடலில் மூழ்கியதாக உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். அதில் பயணம் செய்த 55 பயணிகளும்; கொல்லப்பட்டனர். இவ்வானூர்தியை புலிகளே சுட்டு வீழ்த்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2002ஆம் ஆண்டில் நோர்வே அரசின் ஆதரவுடனான போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து பயணிகள் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பித்தன. 2002 எக்ஸ்போ ஏர் சேவை யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது. 2013 ஜனவரி 4ஆம் திகதி பலாலி விமான ஓடுபாதை திருத்தப்பட்டு புதிய பயணிகள் ஏறுதுறை நிறுவப்பட்டது.

மீள்குடியேற்ற அமைச்சர் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட காணிகளைவிட, மேலும் புதிய காணிகள் பலாலி விமான நிலைய அபிவிருத்தியின் போது மேலதிகமாகக் கையகப்படுத்தமாட்டோமெனக் கூறுகின்றார்.

03)1990ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென  சுவீகரிக்கப்பட்ட காணிகளைவிட பின்பு காணிச்சுவீகரிப்பு இடம்பெற்றதா? ஆம் எனின், அதன்பிறகு இன்றுவரை கையகப்படுத்தப்பட்ட அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான விபரங்கள் எவை? தற்சமயம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென அடையாளம் காணப்பட்டு, கையகப்படுத்த திட்டமிட்டுள்ள புதிய காணிகள் உள்ளனவா? அவை தொடர்பான விபரங்கள் எவை?

பலாலி விமான நிலைய அபிவிருத்தியின் போது எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களுக்கோ, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும்.

கடந்தகால ஆட்சியின்போது இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு இந்திய அரசின் உதவியும் வழங்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

எனினும், இடம்பெயர்ந்த எமது மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் வரையில் இத்திட்டத்தை தாமதப்படுத்த வேண்டிய நிலை அப்பொழுது ஏற்பட்டது. இந்த நிலையில், இத்திட்டம் பற்றி இப்போது மீண்டும் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எமது பகுதியில் முன்னெடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், அவை எமது மக்களின் வாழ்விடங்களுக்கோ, வாழ்வாதாரங்களுக்கோ, சுற்றுப்புறச் சூழலுக்கோ பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது. மேலும், மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி பெறப்படும் அபிவிருத்தித் திட்டமாகவும் அது அமைந்துவிடக் கூடாது.

04)  பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பங்கு என்ன? இந்திய அரசாங்கத்தின் பங்கு என்ன? இது தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் உண்டா? ஆம் எனின், அவை தொடர்பான விபரங்கள் எவை?

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதில், அரசாங்கம் மட்டுமன்றி இந்தியாவும் கூட, அதிகளவு ஆர்வத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த விடயத்தில்; வடமாகாணசபை எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின்; செயலர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருக்கின்றார்.

05பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண சபையின் பங்கு ஏதேனும் உண்டா? அவை தொடர்பான விபரங்கள் எவை?

பலாலி விமான நிலைய விரிவாக்கம் என்பது, தனியே அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயம் மட்டுமல்ல. அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் காலம் காலமாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரமாகவும் உள்ளது.

அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டு, விமான நிலையத்தை அமைப்பதன் மூலம் அபிவிருத்தியைப் பெற்று விட முடியுமா என்ற கேள்வியே மக்கள் மத்தியில் தற்சமயம் காணப்படுகிறது.

06)பலாலி விமான நிலையத்திற்கு அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட இருக்கின்ற குடும்பங்கள் எத்தனை? அவர்கள் எப்பொழுது மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்? இது தொடர்பான விபரங்கள் எவை?

தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை விரிவாக்குவதன் மூலம், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கலாம் என்றும் வர்த்தக தொடர்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகளை இந்தியா தரமுயர்த்திக் கொடுத்திருந்தது.

இப்போது அதன் அடுத்தகட்டமாக, படைத்தள விமான நிலையமாக உள்ள பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக மாற்ற, அதன் செயற்பாடுகளை விரிவாக்குவதற்கான உதவியை இந்தியாவே வழங்கப் போகிறது என்பது புலனாகின்றது.

இதுகுறித்து ஆராய்வதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் குழுவொன்றும் அண்மையில் பலாலி; வந்து சென்றுள்ளது.

07)பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில்  அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக தொடர்ந்தும் காணி கையகப்படுத்தல் நடைபெறுமா? மக்களின் சொந்த நிலம் மக்கள் வாழ்வதற்காக வழங்கப்படுமா? விவசாய காணிகள் பயிர்ச்செய்கைக்காக விடுவிக்கப்படுமா?

இது தொடர்பாக எனது கேள்விகளுக்கான பதில்களை வழங்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் அவர்களை இந்த அவையில் வேண்டிக்கொள்கின்றேன்.

Related posts:

கரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? – நா...
புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...

ஒட்சுட்டானுக்கென தனியானதொரு பிரதேச சபையை  அமைப்பதில் தடைகள் ஏதும் உள்ளனவாகு - நாடாளுமன்றில் டக்ளஸ் த...
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
வடக்கு – கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான தலைவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்?...